தமிழக பா.ஜ.கவின் ஓ.பி.சி. அணியின் மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யாவிற்கும் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையேயான தொலைப்பேசி உரையாடல் மூன்று நாட்களுக்கு முன்பு வெளியாகி தமிழக அரசியலிலும், பாஜகவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜகவின் ஒழுங்கு குழு முன்பு இருவரும் ஆஜராகி தங்களின் விளக்கத்தைத் தெரிவித்தனர். பின்பு இருவரும் ஒன்றாக நேற்று மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து இருவரும் சமாதானமாகச் செல்வதாகத் தெரிவித்தனர். அதேசமயம், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி சூர்யாவை ஆறு மாத காலம் கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். பாஜக நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பாலுவை நாம் நேற்று காலை சந்தித்து இது தொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். அவர் அளித்த பேட்டியின் சுருக்க வடிவம்.
பாஜகவில் பெண்கள் மீதான இணைய மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்களை அரசியல் ரீதியாகவும் மற்றும் சட்டரீதியாகவும் எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
சமீபத்தில் காசியில் நடைபெற்ற காவி (தமிழ்) சங்கமம் நிகழ்ச்சியில் பாரதி கண்ட புதுமைப் பெண் என்றும், பெண்மை வாழ்க என்றும் கூறிவிட்டு பெண்கள் அரசியலுக்கு வரும்போது சனாதனத்தின் மீதும் மனுதர்மத்தின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ள கட்சி அதன் அடிப்படையில் இயங்கும் நிலையில் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் இது. பாஜக ஆர்எஸ்எஸ் கொள்கையான சனாதனத்தை நிலை நிறுத்தவும் மனுதர்ம ஆட்சியைப் பரப்பவும் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார்.
பல நாடுகளில் பெண்கள் மீதான மதிப்பீடு குறைவாக உள்ளது. சனாதன மனுதர்ம முறைப்படி பெண்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்து, போகப் பொருளாக வைத்திருந்தனர். இருநூறு மற்றும் முந்நூறு ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தனிச் சமூக பெண்கள் யாரும் படிக்கவில்லை. பெண் விடுதலைக்கு கடைசி வரைக்கும் போராடியவர் பெரியார். பெண்களை, சம்பிரதாயங்களை உடைத்து வெளியே வரவும் படிக்கவும் ஆங்கிலம் பேசவும் வலியுறுத்தினார். முதன் முதலாக பெண்கள் படித்து பேங்க் போன்ற வேலைகளில் பணியாற்றினர். ஆனால், இவர்கள் அப்படி வேலைக்குச் சென்ற பெண்களை எல்லாம் மிகவும் கடுமையாக விமர்சித்து எழுதினர்.
அரசியலில் தங்களின் இருப்பை காட்டிக்கொள்ள திருச்சி சூர்யாவின் பேச்சு மிகவும் அருவருக்கத்தக்க, ஆபாசமான வகையில் பேசியிருக்கிறார். அதனைத் தமிழ்நாட்டில் கேட்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுவும் சிறுபான்மையின பெண்ணின் சமூகத்தைப் பற்றியும், நடத்தை பற்றியும் மிக மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளார். இதனை சட்டப்படியாக பார்த்தால் அந்தப் பெண்ணிற்கு நிகழ்த்தப்பட்டது ஊடக தாக்குதல், கொலை மிரட்டல், பெண் தொடர்பான வன்கொடுமை என இவர் மீது மூன்று முதல் நான்கு வழக்குகள் வரை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும். இந்தியத் தண்டனை சட்டத்தின் படியும் இந்தியத் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படியும் கட்சித் தலைமை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த சம்பவத்தில் திராவிட சிந்தனை கொண்ட பெண்ணுரிமை பேசுகிற சகோதரர்கள் இது பற்றி பேசியுள்ளனர். அவர்களைப் பொறுத்தவரை முதலில் பெண்ணுரிமையே. அதன்பிறகே அரசியல். அதன் காரணமாகவே அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காகக் குரல் கொடுத்தனர். இது நாம் பெருமை கொள்ளவேண்டிய விஷயம்.
பாஜக பிரமுகர்கள் இதைப்பற்றி எதுவும் பேசாதது பற்றி...
பாஜகவிற்கு வெளில இருந்து நிறையப் பேர் திராவிட சிந்தனை கொண்டவர்கள் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் பெரியாரிய சிந்தனைகள் கொண்டவர்கள் இதுபற்றி பேசும்போது பாஜகவிற்குள்ளேயே இருக்கும் மதுவந்தி, வானதி சீனிவாசன், எஸ்.வீ.சேகர் போன்றோர் எதுவும் பேசாதது ஏன் என்று தெரியவில்லை. அவர்களின் குரல் எங்கே போனது. இவர்கள் எல்லோரும் அரசியலுக்குள் அரசியல் செய்பவர்கள். உங்களை நம்பி வந்த சிறுபான்மை பெண்ணிற்கும் அங்கே மரியாதை இல்லை.
காலம் காலமாகப் பெண்கள் மீது நடந்து வரும் அடக்குமுறைகள் இனியும் தொடர்ந்து வருமா?
உலகம் முழுவதிலும் பெண்கள் மீதான அடக்குமுறைகள் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் பெண்கள் நிறைய இடங்களில் கொடியை நாட்டியுள்ளனர். அதேவேளையில் சனாதனம், மனுதர்மம் என்று சொல்லி பிற்போக்குத்தனத்தையும் திணிக்கின்றனர். பிராமண சமுதாயத்தில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் அடக்குமுறைகள் பின்பற்றப்படுகிறது. பெண்கள் மீது சூரிய வெளிச்சம் கூட படாமல் வீட்டில் அடக்குமுறைகள் நடக்கிறது.
எழுத்தறிவு மிக்க கேரளாவில் நம்பூதிரி இன பெண்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக தேவகி நிலயம்கொடே என்பவர் தனது எழுபத்து ஐந்தாவது வயதில் ‘பிபோர் தி பிரேக் ஆப் டவன் சீக்ரெட்ஸ் ஆப் தி நம்பூதிரி உமன்’ என்ற நூலில் கூறியுள்ளார். தனது சமூகத்தில் தனக்கு நடந்த கொடுமைகளை எழுதியுள்ளார். இதே போன்று பெண்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்பாக நிறைய நூல்கள் வெளி வந்துள்ளன. தன்னுடைய உணவைக் கூட சுதந்திரமாகத் தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் இருந்துள்ளனர். இது சனாதனம் மனுதர்ம ஆட்சி என்று கூறுகின்றனர்.