Skip to main content

முப்பது நொடி விளம்பரத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா? - விளம்பரங்களின் பயணமும் தாக்கமும்

Published on 14/11/2020 | Edited on 14/11/2020

 

advertising industry and its impact on society

 

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரமலான் எனப் பண்டிகை காலங்கள் வந்துவிட்டால், அச்சு, காட்சி, பேச்சு(வானொலி) ஊடகங்கள் பரபரப்பாக மாறிவிடும். வழக்கத்தை விடக் கூடுதல் விளம்பரங்கள் இடம்பெறும். விளம்பரங்கள் மக்களின் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட தாக்கத்தைக் கொண்டவை தெரியுமா?

 

சேவை, உற்பத்தி இரண்டு வகையான நிறுவனங்களுமே எத்தனை கோடி முதலீடு செய்தாலும், எத்தனை வலிமை மிக்க பெயர் (ப்ராண்ட்) பெற்றிருந்தாலும் சந்தைப்படுத்துதல் இல்லாமல் ஏனைய நிறுவனங்களுடன் போட்டியும் போடமுடியாது, மக்கள் மத்தியில் நிலைக்கவும் முடியாது.

 

சந்தைப்படுத்துவதற்கு எத்தனையோ வகையான ஊடகங்கள் இருக்கின்றன. ஆனால் பெரும் கூட்டத்தை அடைய காட்சி ஊடகத்தை நிறுவனங்கள் நாடுகின்றன. காரணம், 90களில் டிவியும் 2000களில் கைபேசியும்தான் பெரும் பொழுதுபோக்கு சாதனங்களாக மாறிப்போயின. நாம் தினம் கடந்து செல்லும் பலவகையான ஊடகங்களுடன் நம் உறவு இரயில் பயண உறவாகவே இருக்கிறது. ஆனால் டிவி மற்றும் கைபேசி இரண்டு மட்டுமே நம் வாழ்க்கை துணைப்போல் நம்முடனே இருக்கின்றன. அதனாலேயே நிறுவனங்கள் டிவியையும் கைப்பேசியையும் விளம்பரத்திற்காக அதிகளவில் நாடுகிறார்கள்.

 

90களில் தொழிற்புரட்சி ஏற்படும்போதும் அதனைத் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களின் வருகையிலும் விளம்பரங்களின் பங்கு அலாதியானது.

 

விளம்பரத்தின் வலிமை:

 

advertising industry and its impact on society

 

நேர்முகத் தேர்வில் நம்மைப் பற்றி நாம் சொல்வதும்கூட ஒருவகையான விளம்பரமே. 1980 & 90களில் சினிமா சமூகத்தை மாற்றக்கூடிய பெரும் சக்தியாகப் பார்க்கப்பட்டது. தற்போதும் அதே நிலையில் இருக்கிறதா என்றால் பெரும் சந்தேகத்துடனும் சிறு நம்பிக்கையுடனும் ‘ஆம்’ என பதில் சொல்லலாம். 20ஆம் நூற்றாண்டில் இந்த நிலைமை என்றால், 21ஆம் நூற்றாண்டில் விளம்பரங்கள் அந்த வேலையைச் செய்கின்றன.

 

ஒரு விளம்பரம், தனிநபரின் எண்ணம், வாழ்க்கை முறை, பழக்கம் என அனைத்தையும் மாற்றும் வல்லமை கொண்டது. உதாரணத்திற்கு அழகு க்ரீம்களின் விளம்பரங்கள் நாம் வெள்ளையாகலாம், ஆக வேண்டும் எனும் மனநிலைக்கு நம்மை மாற்றியது. வாசனைத் திரவிய விளம்பரங்கள் சில, அவற்றின் மூலம் பெண்களை எளிதில் கவரலாம் என்ற மனநிலைக்கு சில ஆண்களைத் தள்ளின. காதலிக்குப் பரிசு என்றாலே முதலில் ஒரு குறிப்பிட்ட  சாக்லேட் பெயர் பெரும்பாலானோர் மனதில் வரும். காரணம் அவர்கள் விளம்பரம் பெரும்பாலும் காதல் சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். இப்படி எத்தனையோ விளம்பரங்களை உதாரணப்படுத்தலாம்.

 

சில விளம்பரங்கள் தனிமனிதனின் தாழ்வு மனப்பான்மையைத் தூண்டி அதிலிருந்து வியாபாரம் பெறும் வகையிலும் இருக்கும்.  உதாரணத்திற்கு ‘டாண்ட்ரஃப் ஷாம்பு’ விளம்பரங்கள்.

 

குறிப்பாக இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும்  விளம்பரங்கள் பெரும்பாலும் நமது உணர்வுகளுடனே நெருங்கியிருக்கும்.

 

2019ஆம் ஆண்டு இந்தியாவில் விளம்பரத்திற்கு அதிக செலவு செய்த நிறுவனம் ஹிந்துஸ்தான் யூனிலிவர் லிமிட்டட் எனவும் அது செலவு செய்த தொகை ரூ.3,500 கோடி எனவும் சொல்கிறது ஒரு தகவல்.

 

புது கண்ணோட்டத்துடன் புகுத்தப்படும் விளம்பரங்கள்:

 

advertising industry and its impact on society

 

சில நிறுவனங்கள் தங்கள் பொருளை விளம்பரப்படுத்தும்போது அதில் சில புதுமைகளையும் சமூக அக்கறை கொண்ட பார்வையையும் சேர்த்தே விளம்பரப்படுத்துகின்றன.

 

குறிப்பாக 2020 ஆம் ஆண்டுக்கான பொங்கலுக்கு எடுக்கப்பட்ட ‘புரூக் பாண்ட் 3 ரோஸஸ்’ விளம்பரம் ‘ஒற்றுமையின் சுவை’ எனும் வாசகத்தோடு ஒளிப்பரப்பட்டது. அதன் கரு, சாதியெல்லாம் கிடையாது மனித உறவுகள்  மனதுடன் சம்மந்தப்பட்டவை என்பதே.  பழையன கழிந்து புதியன புகுதல் எனும் மரபுடன் அதனை இணைத்து அந்த விளம்பரம் காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

 

இதற்கு முன்னதாகவும் ‘புரூக் பாண்ட் 3 ரோஸஸ்’ இதுபோன்ற விளம்பரங்களை முன்னெடுத்துள்ளது.

 

இதன் தொடர்ச்சியாகப் பல நிறுவனங்கள் தங்களது விளம்பர யுக்தியை இந்த கண்ணோட்டத்தை நோக்கித் திருப்பினர். அவ்வாறு சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட ஒரு தூய இந்தியனுடைய நிறுவனத்தின் விளம்பரம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் சொல்லான ‘ஏகத்துவம்’ வாசகத்துடன் வெளிவந்தது. வெகுமக்கள் மத்தியில் சேரும்முன் மேக் இன் இந்தியா, ஒரே நாடு ஒரே வரி கொள்கையுடன் நாட்டை முன்னேற்றத் துடிக்கும் கட்சிக்காரர்களின் கொள்கையாலும் அரசியல் அழுத்தத்தினாலும் உடனடியாக அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து நீக்கப்பட்டது.

 

அப்படியிருக்க, எப்படி இந்த சாதிப்  பாகுபாட்டை விமர்சித்த விளம்பரம் மட்டும் நிலைத்தது என்றால்  ‘ஒற்றுமையின் சுவை’ வெளிவந்தது தமிழ் மொழியில் மட்டுமே தான்.

 

வோடாஃபோன் நிறுவனத்தின் சூசூ விளம்பரம் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அது மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.


ஊடகங்களும் நிறுவனங்களும்:  

பொதுமக்கள் மத்தியில் நிலவும் சில கருத்துகளை உடைக்கும் வகையில் அவ்வப்போது நிகழ்வுகள் நடப்பதுண்டு.  இங்கு பொதுவாக இரு வகையான கருத்துகள் நிலவுகின்றன.

 

உதாரணத்திற்கு ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி.டி.வி. சருமத்தை வெண்மையாக்குவது போன்ற விளம்பரங்களை ஒளிப்பரப்புவதில்லை என 2015 ஆம் ஆண்டு அறிவித்தது.

 

advertising industry and its impact on society

 

அதேபோல் இந்தியாவின் பிரபல மோட்டார் நிறுவனமான பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது சில ஊடகங்கள் நெறி தவறி நடப்பதால் அவ்வூடகங்களுக்கு எங்களின் விளம்பரங்கள் தரப்படமாட்டாது என்று தெரிவித்தார்.

 

இந்தியாவில் இருக்கும் பெரும் வியாபார நிறுவனங்களில் ஒன்றான ‘ஃபேர் அண்ட் லவ்லி’ தற்போது ‘க்லோ அண்ட் லவ்லி’ என்று பெயர் மாற்றம் கண்டுள்ளது. நிறுவனங்களின் மனம், அணுகுமுறை மாறியதற்கு இது பெரும் எடுத்துக்காட்டு. உடலின் தோல் நிறம் என்பது இயற்கை என்பதை உணரவேண்டிய காலம் இது. 

 

நம் பொருளாதார நிலை, வாழ்விடம்  இவற்றை எல்லாம் தாண்டி விளம்பரங்கள் நம் எண்ணங்களையும் வாழ்க்கை முறையையும் மாற்றியிருக்கிறது என்பது உண்மை.

 

விளம்பரங்களும் தடைகளும்:

அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் அரசியல் விளம்பரங்களை ஒளிபரப்ப எந்த விதமான தடையும் கிடையாது. ஆனால், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் அரசியல் விளம்பரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றது. உலகில் முற்றிலுமாக அரசியல் விளம்பரத்தை டிவியில் தடை செய்துள்ள நாடு நார்வே.

 

இந்தியாவில் சில விளம்பரங்களை ஒளிப்பரப்ப நேர கட்டுப்பாடு உள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அவ்விளம்பரங்கள் ஒளிப்பரப்ப வேண்டும்.

 

விளம்பர நிர்ணயத்திற்கு இந்தியாவில், ‘இந்திய விளம்பர தர நிர்ணய கூட்டமைப்பு (எ.எஸ்.சி.ஐ)’ எனும் அமைப்பு இயங்குகிறது. இந்திய ஊடகங்களில் காட்சிப் படுத்தப்படும் விளம்பரம் குறித்து பார்வையாளர்களுக்கு ஆட்சேபனை இருந்தால் இந்தக் கூட்டமைப்புக்கு அவர்கள் தெரிவிக்கலாம். அவ்வமைப்பு அந்த விளம்பரத்தின்மீது சட்ட நடவடிக்கையை எடுக்கும்.

 

advertising industry and its impact on society

 

இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு சட்டத்தைப் பற்றிப் பார்க்க வேண்டும். கடந்த பிப்ரவரியில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு சட்டத் திருத்தத்தை முன்மொழிந்தது. 1954-ன் மருந்துகள் மற்றும் ஆட்சேபகரமான விளம்பரங்கள், சட்டத்தின்கீழ் சருமத்தின் நிறத்தை மாற்றுவது, பாலியல் சக்தியை அதிகப்படுத்துவது, மகப்பேறின்மைக்குச் சிகிச்சை, மூளைத் திறனை அதிகரிப்பது உள்ளிட்ட 78 வகையான நோய்கள் மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வுகள் அளிப்பதாய் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதற்கான சட்டத் திருத்தம் அது.

 

விளம்பரத்துறையில் பெண்கள்:

ஏனையத் துறைகளில் கொடுக்கப்படாத அளவிற்கு விளம்பரத்துறையில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. ஒருபுறம், நாம் பாரம்பரியம், நம் மூத்தோர் வழி எனக் கற்பிக்கப்பட்டுள்ள கொள்கையுடன், வீட்டு உபயோக பொருட்களுக்கான விளம்பரம் என்றால், மறுபுறம், ஆண்களைக் கவரும் விதத்தில் ஆண்களுக்கான பொருட்கள் விற்பனையைக் கூட்டப் பெண்கள் மையப்படுத்தப்படுகிறார்கள். அனைத்து நிறுவனங்களும் இந்த யுக்தியைக் கடைப்பிடிக்கிறதா என்றால் நிச்சயம் கிடையாது.

 

ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் இதனைத்தான் செய்கின்றன. வெளித்தோற்றத்தில் பெண்களுக்கான முன்னிலை என எடுத்துக்கொண்டாலும், ஆழம் இறங்கிப் பார்க்கும்போதுதான் புரியும் நம் கலாச்சாரம், பெண்கள் குறித்தான கற்பிதம் எல்லாம் அடுத்தடுத்த தலைமுறைக்கு விளம்பரங்கள் மூலம் கடத்தப்படுகின்றன என்று.

 

இந்திய சினிமா நடிகையை வைத்து வெளிவந்த முதல் விளம்பரம் ‘லக்ஸ்’ சோப். 1941ஆம் ஆண்டு ஹிந்துஸ்தான் தாம்ப்ஸன் நிறுவனத்தின் மூலமாக வெளிவந்த ‘லக்ஸ்’ சோப் விளம்பரத்தில் லீலா சிட்னீஸ் எனும் இந்தி நடிகை இந்த விளம்பரத்திற்கான முகமானார். அதன் நீட்சியாய் இன்று வரை பெண்களின் முகம் விளம்பரங்களில் பெரும் புயலாகவே இருக்கிறது.

 

நிறுவனங்களின் உரிமையாளரும் விளம்பரமும்:

 

advertising industry and its impact on society

 

மக்கள் மத்தியில் எத்தனை கோடி கொட்டி விளம்பரம் எடுத்து அவர்களைக் கவர்ந்தாலும் மக்கள் நாடுவது, நம்பிக்கையையும், உறுதியையுமே. அதனால், யாரோ மூன்றாவது நபரின் முகத்தைக் காட்சிப்படுத்தி தங்கள் நிறுவனத்திற்கும் பொருள்களுக்கும் நம்பிக்கை தருவதைவிடத் தாமே தமது நிறுவனத்தின் தயாரிப்பின் முகமானால் இன்னும் சிறந்ததாக இருக்குமென நிறுவனத்தின் உரிமையாளர்களே விளம்பரங்களில் தோன்ற ஆரம்பித்தனர். அப்படி முதலில் தமிழகத்தில் தன் நிறுவனத்தின் முகமாக விளம்பரத்தில் தோன்றியவர் ‘வசந்த் & கோ’ நிறுவனர்.

 

ஒரு நிறுவனத்தின் லாபத்திலும் தனிமனித தேர்விலும் விளம்பரங்கள் மிகப்பெரிய அதிகாரத்தைக் கொண்டுள்ளன. அதேவேளையில் மக்களுக்கான விரிந்த பார்வையையும் விளம்பரங்களே தருகின்றன. அதிகபட்சமாக 30 விநாடிகளுக்குள் ஒரு நிறுவனத்தின் அடையாளமாகவும் பெரும் மக்கள் திரளின் முடிவுகளை நிர்ணயம் செய்யக்கூடியவையுமான விளம்பரங்கள் தொழில்துறை புரட்சியின் பெரும் மையப்புள்ளி.