100 கோடி சொத்து! ஆட்டையப் போடும் மந்திரி!'’ என்ற தலைப்பில், கடந்த ஜூலை 10-12 தேதியிட்ட நக்கீரனில் அட்டைப் படச் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில் விருத்தாசலம் அருகே பெரியவடவாடி கிராமத்தில் இருக்கும் செந்தில் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்களை மந்திரி சம்பத் அபகரிக்கும் முயற்சியில் இறங்கி, அடியாட்களை அனுப்பினார் என அறக்கட்டளையின் சேர்மன் டாக்டர் இளவரசன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் டாக்டர் இளவரசனுக்கு பதில் சொல்வதற்காகவும் மந்திரி சம்பத்திற்கு ஆதரவாகப் பேசுவதாகவும் நினைத்து முதல்வர் எடப்பாடி உட்பட அனைத்து மந்திரிகளையும் சகட்டுமேனிக்கு விளாசிப் பேசிய வாட்ஸ்-ஆப் வீடியோ ஒன்றை ரிலீஸ் பண்ணியுள்ளார் அ.தி.மு.க. ஒ.செ. ஒருவர். அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஒருமையில் பேசியதை தவிர்த்துள்ளோம். கடலூர் தெற்கு ஒ.செ. ராம.பழனிச்சாமியின் வாட்ஸ்-ஆப் வீடியோ வாய்ஸ் இதோ:
இன்னைக்கு தொண்டை சரியில்ல, ஆனாலும் பேசுறேன். எங்களுடைய மாண்புமிகு தொழில்துறை அமைச்சரைப் பற்றியும் அண்ணனின் குழந்தைகள் பற்றியும், "கல்லூரியையும் ஸ்கூலையும் அபகரிச்சு சொத்து சேர்க்கிறார்கள்'னு டாக்டர் இளவரசன் வீடியோ அப்டேட்ஸ் போட்டிருக்கிறார். நான் இளவரசனை குறையாக சொல்லவில்லை. இந்த ஸ்கூல், கல்வி நிறுவனமெல்லாம் உங்களால் மட்டுமா ஆரம்பிக்கப்பட்டதுங்கிறது என்னுடைய கேள்வி. எங்களுடைய அமைச்சருக்கு அதில் பங்கில்லையா? இருந்ததா இல்லையா சொல்லுங்க. அபகரிக்க நினைக்கிறார்கள் என்பது தப்பு. அன்றைய தினம் ஷேராக ஆரம்பிக்கப்பட்டது இந்த கல்வி நிறுவனம்.
அந்தப் பள்ளியில் உங்களுக்கு என்ன ஷேரோ, அந்த காசை வாங்கிட்டு, அடியாட்களை அமைச்சர் அனுப்புறாருன்னு சொல்றீங்களே... இது நியாயமா சொல்லுங்க. டாக்டர், நியாயமா சொல்லுங்க. எவன் சொத்து சேர்க்காம இருக்கான். எந்த மந்திரி சொத்து சேர்க்காம சுகமா இருக்காங்க. நீங்க சொல்லுங்க பார்ப்போம். எனக்குத் தெரியும் எந்த மந்திரியும் சொத்து சேர்க்காம இல்ல. எல்லாரும் பத்து காலேஜ் வச்சிருக்காங்க. எங்க அமைச்சர்கிட்ட மட்டும்தான் காலேஜ் இல்ல.
முதலமைச்சர் முடிவெடுப்பார், அவர் முடிவெடுப்பார்னு சொல்றீங்க. எப்படி முடிவெடுப்பார். எல்லாரும் சொத்து சேர்த்திருக்காங்க. எங்க அமைச்சர் வீட்டுப் புள்ளைகளை தப்பா பேசுறதுக்கு நீங்க யாருங்க. எங்க பிரவீனையோ திவ்யாவையோ அமைச்சரையோ தப்பா பேசுறதுக்கு உங்களுக்கு அருகதை கிடையாது. நீங்க யாருன்னு சொல்ல முடியுமா, சொல்லுங்க பார்ப்போம். அந்த சொத்து 150 கோடிக்குக் கூட போகட்டும். நாங்க ஒண்ணும் தப்பா பேசலை டாக்டர். ஆனா நீங்க தப்பு பண்ணிருக்கீங்க டாக்டர்''. ஐந்து நிமிடம் ஓடக்கூடிய அந்த வாட்ஸ்-ஆப் வீடியோ பதிவில் இப்படியெல்லாம் பேசி அசத்தியிருக்கிறார் ராம.பழனிச்சாமி.