ஊரடங்கை நீட்டிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் கடைசி நிமிடம் வரை எடப்பாடியிடம் இருந்தது. ஈரோடு, கரூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைக் காப்பாற்ற வேண்டும், அச்சமூட்டும் சென்னையில் நிலவரத்தைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற குழப்பத்துடன்தான் மே 2 அமைச்சரவைக் கூட்டத்துக்கு முதல்வர் ரெடியானார்.
அதற்கு முன்பாக, மாவட்ட ஆட்சியர்களுடனும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட கரோனா தடுப்புப் பணிக்கான 12 குழுக்களுடனும் ஆலோசனையை நடத்தினார். மாவட்ட ஆட்சியர்களிடம் பேசும்போது, "பெரும்பாலான மாவட்டங்களில் நோயின் தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த நிலைமை மாறாதபடி கவனத்தைச் செலுத்துங்கள்'' என்று கேட்டுக்கொண்டதோடு, சென்னை நிலவரம் குறித்த தன் கவலையையும் அவர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
"யாருமே எதிர்பாராத வகையில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அதிலும் அறிகுறியே இல்லாமல் நோயின் தாக்கம் பெரும்பாலானோரிடம் இருப்பது அரசுக்குச் சவாலாகத்தான் இருக்கிறது. சுகாதாரத் துறையினர் முழு வீச்சாகப் பணியாற்றி கவனம் செலுத்துகின்றனர். எனவே சென்னையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு விரைவில் குறையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்கள் மாவட்டங்களிலும் இப்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் அனைத்தும் இன்னும் 2 மாதங்களுக்குத் தொடர வேண்டும்'' என்றெல்லாம் அவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
அதேபோல், ஊரடங்கினை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களின் கருத்துகளைக் கேட்டார் எடப்பாடி. அப்போது பலரும், "விதிவிலக்கு செய்யப்பட்டுள்ள அரசின் முக்கியத் துறைகளைத் தவிர்த்து மற்றவைகளுக்குள்ள தடைகளைத் தொடர்ந்து நாம் நீட்டிக்க வேண்டும். அதே நேரம், பொதுப் போக்குவரத்தை எக்காரணம் கொண்டும் இப்போதைக்குத் திறக்க கூடாது என்றெல்லாம் எதார்த்த நிலைமைகளைச் சுட்டிக்காட்டிய அவர்கள், "ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களுக்கான நிதி உதவிகளைச் செய்வதிலும், உணவு பொருட்களை வழங்குவதிலும் மாவட்ட அளவில் சிக்கல்கள் நீடிக்கின்றன. உடனடியாக நிதி உதவியை வழங்குங்கள்'' என்றும் அவர்கள் எடப்பாடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
முதல்வர் எடப்பாடியோ, "அரசின் நிதி நிலைமை உங்களுக்குத் தெரியும். மத்திய அரசிடம் நிதி கேட்டிருக்கிறோம். கிடைத்ததும் கொடுக்கப்படும். அதுவரை நிர்வாகத்தைத் தடையின்றி கவனியுங்கள். பசி, பட்டினி என்கிற பிரச்சனையோடு மக்கள் வீதிக்கு வந்துவிடக்கூடாது. அப்படி வந்தால் பெரும் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, அதில் கவனமாக இருங்கள்'' என்று அரசின் நிதி நிலைமையையும் அவர்களிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையிலான 12 சிறப்புக் குழுக்களிடமும் எடப்பாடி கலந்துரையாடினார். அவர்களும், "எக்காரணம் கொண்டும் பொதுப் போக்குவரத்தைத் திறந்துவிடக் கூடாது'' என்று வலியுறுத்தியதோடு, "தொற்றே இல்லாத மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கைத் தளர்த்திக் கொள்ளலாம். எனினும் மாவட்டங்களின் எல்லைகளை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் போக அனுமதிக்கக் கூடாது. அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய போக்குவரத்து வாகனங்களைக் கூட, மாவட்ட எல்லைகளிலேயே நிறுத்தி, முழுமையாகக் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே, அவற்றை அனுமதிக்கவேண்டும்'' என்று அவர்கள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.
அடுத்ததாக, மருத்துவ நிபுணர்களோடும், தொற்றியல் துறை நிபுணர்களோடும் ஆலோசித்தார் எடப்பாடி. அவர்களோ 'ஹாட் ஸ்பாட்' எனக் கண்டறியப்பட்ட மாவட்டங்களில் மட்டுமல்லாது, பொதுவாக தமிழகம் முழுவதும் ஊரடங்கை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பது மிகமிக அவசியமாகும். பொதுவாக, 3 கட்ட ஊரடங்குதான் முழுமையான ரிசல்ட்டைத் தரும். 3 ஆம் கட்ட ஊரடங்குக்குப் பிறகு தளர்வுகள் இருக்கலாம். அதுவரை தளர்வுகளைத் தள்ளிவைத்து, ஊரடங்கை முழுமையாகப் பின்பற்றவேண்டும். அப்போதுதான், தொற்றின் பேரழிவில் இருந்து மாநிலத்தைக் காப்பாற்ற முடியும்'' என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு எடப்பாடி ரெடியான சூழலில், பெரும்பாலான அமைச்சர்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதை அவர்கள், தொடர்ந்து எடப்பாடியிடமும் வலியுறுத்தி வருகிறார்கள். கரோனா பரவலைத் தடுத்துவிட்டோம் என கலெக்டர்கள் பலரும் சொன்னாலும், ஊரடங்கைத் தளர்த்தக் கூடாது என்றும் கருத்துரைத்து வருகின்றனர்.
அவர்களிடம் எடப்பாடி, "நாம் என்ன முடிவுகளை எடுத்தாலும் மத்திய அரசின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்கிறோம். ஏப்ரல் 30 வரைதான் ஊரடங்கை நாம் நீட்டித்தோம். பிரதமரோ, மே 3 வரை அதை நீட்டிக்கிறார். அதனால் நாம் அறிவித்த ஊரடங்கு மதிப்பிழந்து விடுகிறது. அந்த வகையில், மத்திய அரசின் முடிவுகளுக்கேற்பத்தான் நாம் முடிவெடுக்க வேண்டும்'' என்று சொல்லிவருகிறார்.
மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு என மத்திய உள்துறை முடிவெடுத்ததால், இன்னும் எவ்வளவு காலம் இந்த ஊரடங்கு நீடிக்கும்? என்ற பதட்டம் அரசையும் மக்களையும் தொற்றிக்கொண்டுள்ளது.