Skip to main content

பாமக இருக்கு... இந்த மூன்றில் ஒன்றை தைரியமாக எடுங்கள்... பிரேமலதாவின் சாய்ஸ்க்கு விட்ட நிர்வாகிகள்

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

Premalatha

 

தேமுதிகவை தொடங்கிய விஜயகாந்த் முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும்போது, அனைத்து தொகுதியிலும் தனது கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தார். அதன்படி அனைத்து தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிட்டது. அப்போது அவர் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அந்தச் சட்டமன்றத் தேர்தலில் அவர் மட்டும்தான் தேமுதிக சார்பில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

அதனைத் தொடர்ந்து, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. அடுத்த தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றது தேமுதிக. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு வரும் என்று காத்திருப்பதாக தேமுதிக சொல்லி வருகிறது. 

 

அதிமுக கூட்டணியை இன்னும் உறுதிப்படுத்தாத நிலையில், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரியாத நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள், விருப்ப மனுவை வரும் 25ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை அளிக்கலாம் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. 

 

கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக தோல்வியை சந்தித்ததால் இந்த முறை வெற்றிப்பெற்றே ஆக வேண்டும் என்று கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசி வருகிறார் பிரேமலதா. இதனிடையே தேமுதிகவுக்குச் சாதகமான தொகுதிகள் எவை என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

அதிமுக கூட்டணி அமைந்தால் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் அல்லது விருத்தாசலம், ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளைக் குறித்து கட்சித் தலைமையிடம் கொடுத்துள்ளதாகவும், அந்த தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியைத் தேர்வு செய்து பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என்றும் அக்கட்சியினர் சிலர் தெரிவிக்கின்றனர். விஜயகாந்த் முதன்முதலாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், அந்த தொகுதியில் பிரேமலதா போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாமக வருவதால், அந்த தொகுதியில் எளிதில் வெற்றிபெறலாம் என்று அக்கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்