நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் இயங்கிவரும் செந்தில்குமரன், நக்கீரன் 360 யூ-டியூப் சேனலில் 'தமிழன் என்றோர் இனமுண்டு' என்ற நிகழ்ச்சி வாயிலாக தமிழ் மொழியின் வரலாறு, தமிழர்களின் வரலாறு, தமிழ் மக்களின் வாழ்வியல் உள்ளிட்ட தமிழ் சார்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிவருகிறார். அந்த வகையில், இன்று பேசப்படும் தமிழ் வரலாறுகள் எதை அடிப்படையாக வைத்து பேசப்படுகின்றன என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
தமிழ் வரலாறுகள் குறித்து நாம் பேசும்போது எந்த அடிப்படையில் இந்த வரலாறுகள் கூறப்படுகின்றன என்ற கேள்வி எதிரே இருப்பவர்களுக்கு வரலாம். இது இயல்பானதே. வரலாறு குறித்துப் பேசும்போது உண்மைத்தன்மை என்பது மிகமுக்கியம். ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்று நாம் ஒரு வரியில் கூறினாலும் அது அவர்களுக்கு நம்பத்தகுந்தக்கூடியதாக இல்லாமல் தெரியலாம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் சதி மற்றும் சூழ்ச்சி காரணமாக தமிழினத்தின் வரலாறுகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வந்திருக்கின்றன. இதற்குக் காரணம், நம்மீது நடந்த இனரீதியான, மொழி ரீதியான, கலாச்சார ரீதியான படையெடுப்புகளே. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'யாதும்ஊரே யாவரும் கேளீர்' என்று வாழ்ந்த நம் மக்கள் கூட்டம், அந்நிய மனிதர்களையும் நட்பாகத்தான் பார்த்தது. ஆனால், வந்தவர்கள் அப்படி இருந்தார்களா என்றால் இல்லை. இது இங்கு மட்டுமில்லை; உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தாலும் இதுதான் நியதி.
இத்தகைய சூழலில், நாம் எதை ஆதாரமாக வைத்து தமிழ் வரலாறு பேசுவது? இந்தியா கூறும் தமிழ் வரலாறு என்பது இருட்டடிப்பு செய்யப்பட்டதன் மிச்சமே. இந்திய வரலாறு என்பதே ஒரு நகைச்சுவைதான். 'இந்தியாவில் இந்தியர் அல்லாத அரசுகள் எழுந்ததும் வீழ்ந்ததும்தான் இந்திய வரலாறாகக் கூறப்படுகிறது' என்றார் மாமேதை காரல் மார்க்ஸ். தமிழ் மொழியைப்பற்றி, தமிழ் நிலத்தைப்பற்றி இந்தியாவிற்கு அப்பாற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உலக மொழியியல் மற்றும் வரலாற்று அறிஞர்கள் கூறும் வரலாறுகளையும் சான்றுகளையும் ஆதாரமாக வைத்து நாம் பேசலாம். ஏனென்றால் அவர்களுக்கு பொய் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை; நம்மைப் பாராட்ட வேண்டிய தேவையும் இல்லை. இதை முதல் ஆதாரமாக எடுத்துக்கொண்டால் கல்வெட்டுகளை இரண்டாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக ஆஸ்திரேலியாவில் நடந்த மிகப்பெரிய அகழ்வாராய்ச்சியில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மணி ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த மணியில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தைக் கூறலாம்.
அதற்கடுத்தபடியாக இலக்கிய ஆதாரங்களைக் கூறலாம். இலக்கியங்களில் கற்பனையும் உணர்ச்சியும் மிகுதியாக இருக்கும் என்பதால் அதைச் சான்றுகளாக எடுத்துக்கொள்ள முடியாது என்று சிலர் கூறுவார்கள். இந்த கருத்தை எப்படி முழுவதுமாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதோ அதேபோல மறுக்கவும் முடியாது. ஏனென்றால் சில இடங்களில் 'முன்பொரு காலத்திலே...' எனக் காலம் வெறுமனே குறிப்பிடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் இலக்கியங்கள் முழுவதும் பொய் என்றோ கற்பனை என்றோ கூறிவிட முடியாது. உலகத்தில் பிற பகுதிகளில் மாயம், மந்திரம், சக்திகளை மையமாக வைத்து இலக்கியங்கள் எழுதப்பட்ட நேரத்தில், இவன் ஒரு வணிகர் பையன்... இவள் ஒரு வணிகர் பொண்ணு... இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தனர் என மக்கள் வாழ்வியலை மையப்படுத்திய கதையை சிலப்பதிகாரமாக நாம் சொன்னோம். மற்றவர்கள் பேய், பிசாசு எனக் கற்பனைகளை எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் அற்புதமான வாழ்வியல் அனுபவங்களைப் புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை எனப் பதிவு செய்துகொண்டிருந்தோம். அத்தனையும் இன்றைய காலத்திற்கும் பொருந்துவதுபோல யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளன.
இலக்கியங்களில் கூறப்படுவது எவ்வாறு கூறப்படுகிறது எனப் பார்க்கலாம். நமக்கொருவர் தக்க நேரத்தில் பெரிய உதவி செய்கிறார் என எடுத்துக்கொள்வோம். அவரைப்பற்றி மற்றவர்களிடம் நாம் கூறும்போது, அவரை மாதிரி நல்லவர் இந்த உலகத்திலேயே கிடையாது எனக் கூறுவோம். அவரைவிட நல்லவர் இந்த உலகத்திலேயே கிடையாதா என்றால் நிச்சயம் இருப்பார்கள். இது நாம் அவரைப் பாராட்டும் முறை. இலக்கியங்களிலும் சில இடங்களில் இது உண்டு. இதை மற்றொரு கோணத்தில் பார்க்கலாம். இத்தகைய பாராட்டுகளுக்கு உரிய ஒருவரைத்தான் நாம் இப்படி பாராட்டுவோமல்லவா. ஒரு கெட்டவரை நாம் நிச்சயம் இப்படி பாராட்டமாட்டோம். ஆகையால், இந்த ஒப்புமை வேண்டுமானால் வியந்து ஓதுதலாக இருக்கலாமேயொழிய, அதில் கூறப்பட்ட மைய விஷயம் பொய்யாக இருக்க வாய்ப்பில்லை. எனவே இலக்கியங்களில் உள்ள ஆதாரங்களைத் தரவுகளாக எடுக்கும்போது அதில் கூறப்பட்ட விஷயங்களைப் பகுப்பாய்வு செய்து, வியந்து ஓதுதலை விடுத்து மற்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி என்ற பழமொழி காலங்காலமாக தமிழ் வரலாற்றைக்கூறப் பயன்படுத்தப்படுகிறது. இதைக் கூறாத மொழி உணர்வாளர்களோ, மொழிப்பற்றாளர்களோ, மொழி அறிஞர்களோ இல்லை என்று சொல்லலாம். இந்தப்பழமொழி உண்மையா? இந்தப் பழமொழிக்கான விளக்கமாக இன்று கூறப்படும் விளக்கம் உண்மையானதா? கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன? அடுத்த பகுதியில் விரிவாகப் பார்ப்போம்.