Skip to main content

தயாரிப்பாளர்களின் இந்த வலியை நடிகர்கள் உணர வேண்டும்! - தயாரிப்பாளர், நடிகர் இந்திரகுமார்!

Published on 24/04/2018 | Edited on 25/04/2018

'குற்றம் 23' மற்றும் 'தடம்' ஆகிய  படங்களை தயாரித்த தயாரிப்பாளரும், 'கொடிவீரன்' படத்தில்  வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவருமான இந்திரகுமாருக்கு இன்று பிறந்தநாள். அவரிடம் 'ஹேப்பி பர்த்டே' சொல்லிவிட்டு தமிழ் சினிமாவின் இன்றைய நிலை, ஸ்ட்ரைக், சின்ன படங்கள் - பெரிய படங்கள் போட்டி என பல விஷயங்களை பேசினோம்...
 

indirakumar

 

 

நடிக்கும் ஆசையில்தான் தமிழ் சினிமாவிற்குள் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தீர்களா ?

சினிமா ஒரு ஆர்ட், அதை லவ் பண்ணி பண்ணனும். வந்தோம் சம்பாதிச்சோம் அப்படினு போகக் கூடாது. எனக்கு நடிக்கணும் அப்படிங்குற ஆசை இல்ல. கொடிவீரன் படமே தற்செயலா  நடந்ததுதான். குற்றம் 23 படத்துக்கு ஒரு டிவி இன்டர்வியூ நடந்துச்சு. அதைப் பார்த்துதான் சசிகுமார் சார் வந்தாங்க, கதை சொன்னாங்க, பிடிச்சிருந்தது அதனால் நடிச்சேன்.  நான் ஒரு படம்தான் நடிச்சிருக்கேன். நடிப்புக்கு  நூறு  சதவீதம் டெடிகேஷன் ரொம்ப முக்கியம். ஒரு படத்த தயாரிக்கிறத விட நடிக்கிறது ரொம்ப கஷ்டம். 
 

உடம்பை ஃபிட்டா வச்சிருக்கீங்க, இப்பவும் நடிப்புக்கு ஃபிஸிக்கல் ஃபிட்னஸ் தேவைப்படுதா?

கண்டிப்பா, நடிப்புக்கு ஃபிட்னஸ் அவசியம். கொடிவீரன்ல நடிக்க மதுரை போயிருந்தேன். ஒரு பதினஞ்சு வருஷமா ஜிம்ல வொர்க் அவுட் செய்யுற என்னால மதுரைல, அந்த நாற்பது டிகிரி வெயில்ல இருக்க முடியல. அதனால எல்லா இண்டஸ்ட்ரில இருக்குறவங்களுக்கும் ஃபிட்னஸ் அவசியம்.

 


அருண் விஜய்க்கும் உங்களுக்கான நட்பு குறித்து சொல்லுங்கள்?

அருண் விஜய்க்கு 'என்னை அறிந்தால்' நெகடிவ் ரோல் ஒரு பிரேக் கொடுத்துச்சு. ஹீரோவா லைஃப் கொடுத்தது 'குற்றம் 23'தான். நல்ல நடிகர் அவர். அவர் வளர்ச்சியில் என் பங்கென்று தயாரிப்பைத் தவிர வேறெதுவும் கிடையாது. உழைப்பு அவருடையது. அடுத்து தயாரிக்கும் படம் 'தடம்'. அதிலும் அருண் விஜய்தான். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அவர் என்னக்கு நல்ல நண்பர் மட்டுமில்ல,  நாங்கல்லாம் ஒரு குடும்பம்.


ஒரு தயாரிப்பாளராக சினிமா ஸ்ட்ரைக், பெரிய படங்கள் - சின்னப் படங்களை அமுக்குவது, இப்படி போய்க்கொண்டிருக்கும்  இண்டஸ்ட்ரியின் நிலைமை பற்றி நினைக்கிறீங்க?

நேத்து கூட ஞானவேல் ஒரு ஸ்டேஜ்ல சொன்னாரு, தமிழ் இண்டஸ்ட்ரிக்கும் , தெலுங்கு இண்டஸ்ட்ரிக்கும் என்னென்ன வித்தியாசம் இருக்குனு. அதை உண்மையா நான் அப்ரிஷியேட் பண்றேன். இங்க சின்ன படம், பெரிய படம்னு முதல பிரிச்சு  பார்க்கக்கூடாது. தமிழ் ஆடியன்ஸ் தெளிவா இருக்காங்க.  ஆடியன்ஸ் முன்னாடி மாதிரி ஹீரோவெல்லாம் பார்த்து படத்துக்கு போறதில்லை. கதை நல்லாயிருக்கானுதான் பாக்குறாங்க. அதனால ஆடியன்ஸ் சின்ன படம், பெரிய படம் அப்படினு பார்த்து வரல, நாமளும் பிரிச்சு  பாக்கவே கூடாது. இந்த ஸ்ட்ரைக் விஷால் சாரும், செல்வமணி சாரும் மத்தவங்களும் சேர்ந்து பண்ணி இப்ப வெற்றி கிடைச்சிருக்கு. இதனால தயாரிப்பாளர்களுக்கு பெனிஃபிட் இருக்கு. இது ஒரு மைல் ஸ்டோன்தான்.

 

indirakumar



தமிழ் நடிகர்கள் தங்களது சம்பளத்தைக்  குறைக்க வேண்டுமென்று நேத்து ஞானவேல்ராஜா சொல்லியிருந்தார். அதைப் பற்றி நீங்க என்ன நினைக்குறீங்க?

முதலில் சொன்ன மாதிரி அதை கண்டிப்பா நான் அப்ரிஷியேட் பண்றேன். ஹிந்தி சினிமாவுல போய் பாத்தீங்கனா அவங்களுக்கு படத்திலிருந்து ஷேர் பேஸ்லதான் சம்பளம் போகும். ஆனால் இங்க பார்த்தீங்கன்னா பத்து கோடி சம்பளம் கொடுத்துட்டு ஆறு கோடிக்கு படம் எடுத்து ஓடலைனா நஷ்டம் தயாரிப்பாளருக்குத்தான். ஒரு டைரக்டர் சொல்லுற கதைய நம்பித்தான் தயாரிப்பாளர் படத்துக்குக் காச போடுறாரு. நூறு கோடி பட்ஜெட் படம் அப்படினா அதுல நாற்பது கோடி ஹீரோவுக்கே போயிடும். சினிமாவுக்கு தயாரிப்பாளர்தான் முக்கியம். அவுங்க இல்லனா தமிழ் சினிமா கிடையாது. இங்க தயாரிப்பாளருக்கு மரியாதையே கிடையாது. இந்த பத்து வருஷத்துல எத்தனையோ தயாரிப்பாளர்கள் காணாமல் போயிட்டாங்க. இப்ப இருக்கிறது ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டும்தான். இன்னைக்கு ஒரு படம் ஓடுதுன்னா அதுல யாருக்கு பேரு கிடைக்குது? டைரக்டர், ஹீரோ, கேமரா மேன் அவங்களுத்தான். தயாரிப்பாளருக்கு போட்ட காசே கிடைக்க மாட்டேங்குது. ஒரு தயாரிப்பாளரோட வலிய நடிகர் புரிஞ்சிக்கணும். அவங்க எங்கே இருந்து காசு கொண்டு வராங்க, எப்படி கொடுக்குறாங்க, அதையெல்லாம் தெரிஞ்சிக்கணும். ஒரு டைரக்டர் ஐம்பது நாளுல ஒரு படத்த முடிச்சி தரேன்னு சொன்னா தரணும். அத விட எக்ஸ்ட்ரா அஞ்சு நாள் போனாலும் காசு எவ்வளவோ செலவாகும்? ஒரு சில தயாரிப்பாளர்கள்  தமிழ் வேணாம், தெலுங்கு போகலாம்னு முடிவு பண்ணிட்டாங்க. ஆனா தமிழ் இண்டஸ்ட்ரி இந்தியாவில் சிறந்தது மற்றும் இங்கு பல திறமைசாலிகள்  உள்ளனர், அதை கெடுத்துவிடக்கூடாது.


கொடிவீரன் படத்தில் நீங்கள் நடிச்சுருக்கீங்க. அசோக்குமார் மரணம் எந்த அளவுக்கு பாதித்தது? அந்த விஷயத்தில் என்ன நடந்தது? கடன் கொடுத்துட்டு தற்கொலை பண்ற அளவுக்கு டார்ச்சர் பண்ணுவது சரிதானா?

அதுவும் எனக்கொரு குடும்பம் மாதிரிதான். அங்க அசோக்குமார்தான் எல்லா வேலையும் பார்த்துக்கொள்வார். அவங்களுக்குள்ள என்ன நடந்துச்சுனு தெரியாது. நானும் அன்புகிட்ட இத பத்தி கேக்கல. ஒரு டைரக்டர் தயாரிப்பாளர்கிட்ட சொன்ன தேதிக்குள்ள முடிச்சுக் கொடுக்கணும். அப்படி இல்லனா அடுத்தடுத்த நாட்களில் ஆகுற கூடுதல் செலவை கணக்குப் பண்ணா கோடியைத் தாண்டிடும். எந்த ஒரு டைரக்டரும் நடிகரும்  படம் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம், 'என்ன லாபம், என்ன நஷ்டம்'னு கேக்குறாங்களா? நான் எல்லாரையும் சொல்லல. ஒரு சில பேரை சொல்றேன். இந்த ஹீரோதான் வேணும், இந்த லொகேஷன்தான் வேணும்னு சொன்னவுடனே எல்லாத்தையும் தர்றோம். அதனால எங்களுடைய வலி, கஷ்டத்தை அவுங்க  புரிஞ்சிக்கணும்.


அடுத்து தயாரிப்பாளரா, நடிகரா என்னென்ன படங்கள்?

தயாரிப்பாளரா 'தடம்', நடிகரா 'சுந்தரபாண்டியன் 2'. வில்லனா நடிக்குறேன். இப்ப காலையில கூட விஷால் ஆஃபீஸ்ல இருந்து கால் வந்துச்சு. இன்னும் அது முடிவாகலை.  நல்ல கதைகள் வந்தால் வில்லனாக நடிப்பேன். ஏன்னா, ஹீரோவ விட வில்லன்கள் கம்மியா இருக்காங்க. அதனால இந்த டிராக்ல சரியா டிராவல் பண்ணி வின் பண்ணுவோம்.

Next Story

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
cancer children fly in airplane with help of mime gopi

மெட்ராஸ், கபாலி, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் மைம் கோபி. இவர் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அதன் மூலம் பெற்ற பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலவிடுவதாகச் சொல்லியிருந்தார். அதனடிப்படையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சென்னை அண்ணா நகரில் உள்ள தேன் மொழி நினைவு அறக்கட்டளை உதவியுடன் ‘வான் உலா’ எனப் பெயரிட்டு சென்னையில் இருந்து பெங்களூர் வரை அழைத்துச் சென்றுள்ளார். இதற்காக அக்குழந்தைகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவர்களை நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமார் வழியனுப்பி வைத்தார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மைம் கோபி, “இங்க இருக்கிற எல்லா மக்களும் என்னுடைய மக்கள். அதனால் இது உதவி கிடையாது. கடமை. எனக்கு விமானத்தில் போக 30 வருஷம் மேல் ஆனது. இந்த வாய்ப்பு இந்த குழந்தைகளுக்கு எப்போது கிடைக்கும். அதை ஏன் கொடுக்கக்கூடாது. இன்னொருத்தரை சந்தோசப்படுத்தி பார்ப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. சந்தோஷம் எந்தளவிற்கு கூடுதோ ஆயுள் கூடும் என்பார்கள். ஆயுள் கூடுவதற்கு நன்றாக சிரிக்கணும். இந்த குழந்தைகள் நன்றாக சிரித்தாலே நோய் விட்டுப் போய்விடும்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த உலா. விமானத்தில் முதல் தடவை பறக்கும் போது, நம்மை அறியாமல் பட்டாம்பூச்சி பறக்கும். இது வெறும் துவக்கம் தான். இன்னும் 3 மாதம் கழித்து இன்னொரு சூப்பரான விஷயத்தை பண்ணப் போகிறோம். பிறவியிலே பார்வையில்லாத, வாய் பேசாத, காது கேட்க முடியாத பிள்ளைகளை கூட்டிப் போக திட்டமிட்டிருக்கிறோம். அதையும் தாண்டி குழந்தைகளுக்கான நூலகம் ஆரம்பிக்கிறோம்” என்றோம்.

Next Story

“அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் நான் இல்லை” - விஷால்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 Vishal says I am not one to say that I will come to politics and then back off

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே தனது அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் விஷால். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து விஷால், “இனி வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்” என அறிக்கை வெளியிட்டிருந்தார். .

இந்த நிலையில், விஷால் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அது துறை கிடையாது. அரசியலை பொழுதுபோக்காக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும். எல்லாரும் அரசியல்வாதிகள் தான். 2026 ஆம் ஆண்டில் தேர்தல் வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை. தற்போது அதிக கட்சிகள் உள்ளன. நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன்” என்று கூறினார்.