Skip to main content

தொகுதியில் மாணிக்கம்.. டெல்லியில் பாட்ஷா; நட்சத்திர தொகுதி விருதுநகரில் மீண்டும் களத்தில்!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Details about Manickam Thakur

கிங் மேக்கரை உருவாக்கிய விருதுநகர் தொகுதியில் பாரம்பரியமாக 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக மாணிக்கம்தாகூரை அறிவித்துள்ளது. முன்னதாக விருதுநகரில் வேறு வேட்பாளர் களம் இறக்கப்படுவதாக செய்திகள் வெளியான நிலையில், வெர்சன் 2.0-வாக மாணிக்கம் தாகூரையே மீண்டும் களம் இறக்கியுள்ளது டெல்லி காங்கிரஸ் தலைமை.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியானது, மதுரை மாவட்டத்தோடு இணைந்த திருப்பரங்குன்றம், திருமங்கலம் தொகுதிகளையும், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. தமிழகத்திற்கு பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர் என வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்களை கொடுத்த விருதுநகர் மாவட்டத்தின் மக்களவைத் தொகுதியின் 17-ஆவது உறுப்பினராக கடந்த 2019 ஆம் ஆண்டு மாணிக்கம்தாகூர் வெற்றி பெற்றார். இவரின் சொந்த மாவட்டம் சிவகங்கை‌. முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனின் உடன்பிறந்த மூத்த சகோதரர் பஹீரத நாச்சியப்பனின் மகன்‌ மாணிக்கம் தாகூர். பெங்களூரில் பி.ஏ.எல்.எல்.பி படித்து பட்டம் பெற்றார். இந்திய தேசிய மாணவர் காங்கிரஸ் அணியின் மாவட்டச் செயலாளராக கடந்த 1994 ஆம் ஆண்டு அரசியல் பயணத்தை மாணிக்கம் தாகூர் தொடங்கினார். 

இதையடுத்து, அவரின் சிறப்பான பணியை கவனித்த காங்கிரஸ் தலைமை, இரண்டு வருடங்களிலேயே மாநிலம் மற்றும் தேசிய அளவில் பொதுச்செயலாளர் பதவி வழங்கி அழகு பார்த்தது. தற்போது முழு நேர அரசியல்வாதியான மாணிக்கம் தாகூருக்கு வயது 49. 1994 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் பதவி வகித்து வரும் மாணிக்கம்தாகூர், தற்போது ஆந்திர மாநில மேலிட பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளராகவும் பதவியில் உள்ளார். சிவகங்கையை சேர்ந்தவரான மாணிக்கம் தாகூர், திருமணம் முடிந்து திருமங்கலத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவி சுபாஷினி. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். 

கடந்த 2009 ஆம் ஆண்டு விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணிக்கம் தாகூர், 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தனித்து நின்று போட்டியிட்டபோது, அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனிடம் தோல்வி அடைந்தார். மீண்டும் 2019 ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதையடுத்து, விருதுநகர் எம்பியாக பதவி வகித்த மாணிக்கம் தாகூரின் பார்லிமென்ட் வருகை பதிவேடு 88 சதவிகிதமாக உள்ளது. 92 பார்லிமென்ட் விவாதங்களில் பங்கெடுத்த மாணிக்கம் தாகூர் மத்தியில் ஆளும் பாஜக அரசிடம் இதுவரை 308 கேள்விகள் வரை கேட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. இணக்கமான அரசு மத்தியில் அமையாத சூழலிலும், இதுவரை சாத்தூர் அருகே ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க வெளியிடப்பட்ட அறிவிப்பு, திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்குவழிச் சாலைத் திட்டம், முடிவுக்கு வந்திருக்கும் மதுரை முதல் செங்கோட்டை வரையிலான மின் ரயில் பாதைத் திட்டம் போன்றவை மாணிக்கம்தாகூர் கடந்த கால விருதுநகர் எம்பியாக இருந்தபோது செய்த சாதனை என கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள். 

இதனிடையே, பார்லிமென்ட்டில் இருந்த மாணிக்கம் தாகூர், தொடர்ந்து பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தார். சமீபத்தில், நாடாளுமன்ற மக்களவையில் அத்துமீறி ஒருவர் நுழைந்து கலர் வெடிகளை வீசியபோது, மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடே காரணம் என எதிர்க்கட்சி எம்பிகள் கேள்வி கேட்டனர். அப்போது, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எம்பிகள் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இந்த செயல் 'ஜனநாயக படுகொலை' என துணிச்சலுடன் மதுரை எம்பி சு.வெங்கடேசனுடன் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு, பரம்பரை காங்கிரஸ்காரராக வெளிப்பட்டார் மாணிக்கம் தாகூர். வரும் 2024 ஆம் ஆண்டில் மீண்டும் மக்கள் வாய்ப்பு அளித்தால், மத்தியில் இந்தியா கூட்டணி தலைமையில் ஆட்சி அமைத்து, மேலும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதே, அவர் தரப்பு நம்பிக்கையாக இருந்து வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சியினர், மாணிக்கம் தாகூரின் அடுத்த வெற்றிக்கு, தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

மூன்றுமுறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, இரண்டுமுறை வெற்றி பெற்றவர் மாணிக்கம் தாகூர். அவரை எதிர்த்து களத்தில் அதிமுக கூட்டணியில் விஜயகாந்த் மகனான விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகாவும் போட்டியாக இருக்கிறார்கள்.  இந்த இருவரும் பிரபலமாக இருந்தாலும், மண்ணோடு ஒட்டிநிற்பது என்னவோ மாணிக்கம் தாகூர்தான். அதனால், இவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சார்ந்த செய்திகள்