பலத்த சர்ச்சையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ள திரைப்படம் அமலா பால் நடித்துள்ள 'ஆடை' திரைப்படம். மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்ன குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். படம் தொடர்பாக அவரிடம் நாம் பேசிய போது பல்வேறு முக்கிய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இதோ அவரின் தெறி பேட்டி,
'ஆடை' படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு படத்தை பெரிய அளவில் பேச வைக்க ஒரு பெண்ணின் நிர்வாணம் தேவைப்படும் அளவுக்குதான் தமிழ் சினிமா உள்ளதா?
பலான படம் போஸ்டரில் தியேட்டரின் பெயரை எங்கே ஒட்டுவார்கள் என்று உங்களுக்கு தெரியும். அதை போல அமலா பால் முதுகில் ஒட்ட வேண்டும் என்று நினைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவில்லை. கதைக்கு நிச்சயம் தேவை என்கிற காரணத்தால் தான் அந்த காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் வேண்டுமானால், இதை தானே எல்லோரும் சொல்கிறார்கள் என்று கேட்கலாம். ஆனால் படத்தை பார்த்த பிறகு உங்களின் எண்ணம் முற்றிலும் மாறும். அதையும் தாண்டி முன்பெல்லாம் ஆபாச படங்களை பார்ப்பது என்பது அனைவருக்கும் கடினமான வேலையாக இருந்தது. இப்போது அதெல்லாம் எதுவுமே இல்லை. எல்லோர் கையிலும் மொபைல் இருக்கும். ஆளுக்கு நாலு ஃபேக் ஐடி வச்சிக்கிட்டு உங்களுக்கு என்ன தேவையோ அதை பாத்துக்கலாம். அதனால், பெண்களை ஆபாசமா சித்தரித்து காட்டினால், கூட்டம் வரும் என்பது எல்லாம் ஒரு மாயை. அதில் கொஞ்சம் கூட உண்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அதையும் தாண்டி சில காரணங்களை ரசிகர்களின் ஆழ்மனதில் பதியவைக்க இந்த மாதிரியான காட்சிகள் தேவைப்படுவது இற்கையான ஒன்றுதான். ஆனால், அது பார்ப்பதற்கு ஆபாசம் இல்லாத வகையில் இருக்க வேண்டும்.
'ஆடை' சுதந்திரத்தை பறிப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
அப்படி இல்லை, அந்த அந்த சூழ்நிலைகளை பொருத்தது அது. சிலருக்கு அப்படி தோன்றலாம். ஆனால் நம்முடைய பழக்க வழங்கங்களுக்கு அது சரி வராது. தனிபட்ட மனிதர்களை சார்ந்து ஒவ்வொன்றும் வேறுபடும். இதுவும் அதை போன்றதொரு கேள்விதான். எப்படி ஃபார்ன் வீடியோக்களை தடை செய்தால் பாலியல் பலாத்காரம் குறையும் என்று நம்புவதை போலத்தான். நெருப்பை தொட்டா சுட்டுவிடும் என்றுதான் சொல்லித்தர வேண்டும், அதற்காக நெருப்பே இல்லாம இருக்க முடியாது. இந்த படத்தை பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு இதுவே எளிமையான பதிலாக இருக்கும்.