விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நடுவப்பட்டியில் உள்ளது திரு ராமமூர்த்தி அரசினர் மேல்நிலைப்பள்ளி. அந்தப் பள்ளியில் 2 ஆசிரியர்கள், 13 மாணவிகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்தார்கள். இந்தக் கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர், தொலைபேசி மூலம் உதவும் அமைப்பான குழந்தைகள் உதவி மையத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றார். விசாரணை நடந்தது. ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகள், பிளஸ் 2 படிப்பை முடித்துவிட்டு, வெவ்வேறு கல்லூரிகளில் போய்ச் சேர்ந்துவிட்டனர். நடவடிக்கைக்கு ஆளாகாத அந்த 2 ஆசிரியர்களும், அடுத்து எதுவும் பண்ணி விடுவார்களோ என்ற கவலை, அங்கு படிக்கின்ற 341 மாணவ, மாணவியரின் பெற்றோரை வாட்டி வதைக்கிறது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நடுவப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இப்படி ஒரு தகவலைச் சொன்னார், பெயர் வெளிவர விரும்பாத அந்த ஊர்க்காரர்.
குற்றச்சாட்டுக்கு ஆளான அந்தப் பள்ளியின் ஆசிரியர் ராமரிடம் பேசினோம்.
“என்ன நடந்துச்சுன்னா.. 27 நாள் ஸ்டடி வச்சோம். அப்ப எச்.எம்.கூட ஸ்கூல்ல இருந்தாங்க. பதிமூணு பிள்ளைங்கன்னா சொல்லுறாங்க? சைல்ட் ஹெல்ப் லைன்ல இருந்து ஸ்கூலுக்கு வந்து விசாரிச்சாங்க. ரெண்டு நாளைக்கு முன்னாலகூட சம்பந்தப்பட்ட பெற்றோரைப் பார்த்து நான் பேசினேன். இப்ப யாரு இந்த விவகாரத்தை உங்ககிட்ட கொண்டு வந்தாங்கன்னு தெரியல. ஏதோ ஒரு வழியில் நான் பழிவாங்கப்படுகிறேன். நான் மிகவும் கண்டிப்பான ஆசிரியர். பிரச்சனை பண்ணுனதுக்குக் காரணம் அதுதான். என்னைப் பிடிக்காத ஆசிரியர்கள்தான் மாணவிகளைத் தூண்டிவிட்டாங்க.
குறிப்பாக ஒரு ஆசிரியை. அவங்க பெயரைச் சொல்ல நான் விரும்பல. யார்கிட்டயாச்சும் நன்கொடை கேட்டு, ஸ்டடிக்கு வர்ற பசங்களுக்கு புரோட்டா, வடை, சாப்பாடுன்னு வாங்கிக்கொடுத்து படிக்க வைப்பேன். அதனால கொஞ்சம் உரிமை எடுத்துக் கண்டிப்பேன். அன்னைக்கு சாயங்காலம்.. இருட்டிருச்சு.. மணி 6-50 இருக்கும். கிளாஸ் ரூம்ல ரெண்டு கேர்ள் ஸ்டூடண்ட்ஸ் ஒரு பையனோடு ஒண்ணா படுத்திருத்தாங்க. அவன், ஒரு கேர்ள் ஸ்டூடண்ட் காலைப் பிடித்து இழுத்துக்கிட்டிருந்தான். நான் பார்த்துட்டேன். சத்தம் போட்டேன். இந்த விஷயத்தை எச்.எம்.கிட்டயும் சொன்னேன். பிரச்சனை இப்படித்தான் ஆரம்பிச்சுச்சு. நான் தவறு பண்ணியிருந்தால்.. மேலே இருக்கிறவன் பார்த்துக்குவான்.” என்றார்.
அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை சிலம்புச்செல்வி நம்மிடம் “நாங்க மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வேலை பார்க்கிறவங்க. ராமர் சார் அவரு பாடம் உண்டு.. அவரு உண்டுன்னு இருக்கிறவர். எல்லாத்தயும் விசாரிச்சிட்டு, சைல்ட் ஹெல்ப் லைன்காரங்க அந்த ஃபைலை க்ளோஸ் பண்ணிட்டாங்க. திரும்பவும் நீங்க விசாரிக்கிறீங்க. அந்த இன்னொரு வாத்தியார் பேரு பாரத்குமார். அவரு வந்து டிராயிங் சார்.
ஸ்டூடண்ட்ஸை அடிக்கிறப்ப படக்கூடாத இடத்துல ஸ்கேல் பட்டுச்சுன்னு சொன்னாங்க. மத்தபடி எதுவும் நடக்கல. அப்பவே, அவரை வார்ன் பண்ணிட்டேன். கிளாஸ் ரூம்ல ஸ்டூடண்ட்ஸ் படுத்திருந்ததை உடனே என்கிட்ட வந்து ராமர் சார் சொன்னாரு. நடந்ததை பேரண்ட்ஸ்கிட்ட நானும் சொன்னேன். ராமர் சார் கறாரா இருப்பாரு. அது சில டீச்சர்ஸுக்கு பிடிக்கல. அவ்வளவுதான். இனிமே பிரச்சனை வராம பார்த்துக்குவேன்.” என்றார்.
மாணவிகள் இருவரின் பெற்றோரைத் தொடர்புகொண்டோம். “அதுவந்து..” என்ற வார்த்தைக்குப் பிறகு எதுவும் பேசவில்லை. மகள்களின் எதிர்காலம் குறித்த அச்சத்தால் அவர்கள் பேச முன்வரவில்லை. அந்தப் பள்ளியில் விசாரணை நடத்தியது குறித்து சைல்ட் ஹெல்ப் லைனிடம் கேட்டோம். அவர்களிடமிருந்தும் சரியான பதில் இல்லை.
தங்களுக்குப் பிடிக்காதவர் என்பதால், சில ஆசிரியர்கள் மாணவிகளைத் தூண்டிவிட்டு, அந்த ஆசிரியரை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாக்க முடியுமா? வகுப்பறையில் தவறாக நடந்ததைப் பார்த்துக் கண்டித்த ஆசிரியரை, மாணவிகளே திட்டமிட்டு, பழியை அவர் பக்கம் திருப்ப முடியுமா? பள்ளியின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது; மாணவிகளுக்கும் கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தோடு, நடந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டதா? என கேள்விகள் வரிசை கட்டி நிற்கின்றன.