காஞ்சி மடத்துக்கும் சர்ச்சைகளுக்கும் எப்பொழுதுமே குறைவிருந்ததில்லை. அதே போல் சங்கரராமன் கொலை வழக்கு வரை காஞ்சி மடத்தின் மீதிருந்த பிம்பம் வேறு. அது உண்மையான இறை பக்தர்களின் பாசத்தினால் எழுந்த பிம்பம். நக்கீரனால் ஒரே நாளில் அந்த பிம்பம் உடைந்து காஞ்சி மடம் கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்களின் புகலிடம் என்பது அம்பலமானது. அந்த மடத்தின் மேல் பெரும் பற்று வைத்திருந்த கோடிக்கணக்கான பக்தர்கள் மனம் உடைந்து அழுத நிகழ்வுகள் அனைத்தும் உண்மைகளாகி கோர்ட்டில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் அளிக்கப்பட்டன. காஞ்சி மடம் அடித்த கூத்தைக் கண்டு மனம் கலங்கிய உண்மை இந்துமத ஒழுக்கசீலரான அக்நிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் ‘இந்து மதம் எங்கே போகிறது?’ என்ற தலைப்பில் நக்கீரனில் தொடர் கட்டுரைகளே எழுதி இந்துக்கள் பலரது மனதிலும் பால்வார்த்தார்.
அன்று காஞ்சி மடத்தை மையமாக வைத்துக் கிளப்பிய பரபரப்புக்கு காரணம், இரண்டு கோடியே ஐம்பத்தைந்து லட்ச ரூபாய். மடத்திற்கு சொந்தமான அந்தப் பணத்தில் 1 கோடியே 60 லட்ச ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலமாகவும், 95 லட்சம் ரூபாய் ஹெச்.டி..எஃப்.சி. வங்கி மூலமாகவும் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டன. அவ்வாறு அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு ஏஜெண்டாக இருக்கும் நிறுவனங்களில் இந்த இரண்டு வங்கிகளும் உடன்பட்டன. அறக்கட்டளை நிறுவனங்கள் பெயரில் காஞ்சி மடத்தின் பணம் முதலீடு செய்யப்பட்டன. அதில் உள்ள மோசடிகளைக் கண்டறிந்து கொள்ளையை வெளியே கொண்டு வந்தது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா.
“அறக்கட்டளை நிறுவனமாக காஞ்சி மடம் அங்கீகாரம் பெறவில்லை. அந்த அடிப்படையில் அரசாங்க பத்திரத்தில் முதலீடு செய்வதற்கான வருமான வரித்துறையின் சான்றிதழையும் பெறவில்லை. மடத்தின் பணத்தை வங்கி நிர்வாகங்கள் மோசடி செய்யும் நோக்கத்துடன் தவறான முறையில் அரசுப் பத்திரமாக முதலீடு செய்துள்ளன. இந்தப் பணத்திற்கு வட்டி எதுவும் இல்லாமல் மடத்திடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என ரிசர்வ் பேங்க் உத்தரவிட்டது.
அறக்கட்டளை நிறுவனம் என்றால் கம்பெனிகள் சட்டத்தின் (1956) 25-வது செக்சனின் கீழ் பதிவு செய்வதுடன், வருமானவரித்துறைச் சட்டம் செக்சன் ‘80-ஜி’யின் கீழ் சான்றிதழும் பெறவேண்டும். இவற்றை செய்யாமல், தனக்கு செல்வாக்குள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கிகள் மூலம் அரசு பத்திரத்தில் முதலீடு செய்து மூக்கறுபட்டது காஞ்சி மடம்.
“நாங்கள் வெறும் ஏஜண்ட்தான். காஞ்சி மடத்தின் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டோம்” என்றார் அன்றைய ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் செய்தித்தொடர்பாளர். ஹெச்.டி.எஃப்.சி. நிர்வாகமோ, “நிதித்துறை அமைச்சகம் சம்பந்தமான ஒரு அறிவிக்கையைக் காட்டியது காஞ்சி மடம். அதனால்தான் நாங்கள் முதலீடு செய்தோம்” என்றது. அன்றைய காஞ்சிமட மேனேஜரான பொள்ளாச்சி மகாதேவன், “இந்தப் பணத்தை அப்போதே திருப்பிக் கொடுத்திருந்தால் வேறு எங்காவது நல்ல வட்டிக்கு முதலீடு செய்திருப்போம்” என்றார்.
தவறான வழிகளில் சம்பாதிக்கப்படும் பணமும் சொத்துக்களும் புழங்கும் இடத்தில் யார் பெரியவன், யார் அதிகமாகத் திருடுவது, யாருக்கு கொள்ளையடிக்கும் அதிகாரம் அதிகம் என்பதில் போட்டியும் பொறாமையும் நிலவுவது வாடிக்கையானது தான். அதற்கு காஞ்சி காம கோடி பீடமும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்தான் இப்பொழுதும் கூத்துகள் அரங்கேறி வருகின்றன.
இன்றைய சங்கரமடத்தில் ஒரு லட்சம் கோடி சொத்துகளுக்கும் அதிகமாகவே புழக்கத்தில் உள்ளது என்கிறார் மடத்தின் ஒரு சேவகர். இதில் மடத்தில் செல்வாக்குள்ளவர்கள் பல கோடிகளை அடித்துவிட்டார்களாம். ஒரு நாளைக்கு பல கோடி ரூபாய் தினசரிப் புழக்கமாகவே கைகள் மாறுகின்றன. இப்படிப்பட்ட பெருந்தொகையான கோடிகளை விஜயேந்திரர் தம்பி ரகுதான் கையாள்கிறார். அவரது அதிகாரத்துக்கும் உட்பட்டது என்கிறார்கள். இதை யார் யாருக்கு எந்தெந்த வகையில் எப்படியெப்படி, எந்தெந்த கம்பெனிகளுக்கு ஹேண்ட்லிங் செய்வது என்பதில்தான் பெரும் போட்டியே நிலவுகிறது என்கிறார்கள் மடத்தின் ஊழியர்கள்.
போட்டி யார், யாருக்கு என்று நாம் விசாரித்ததில்... ஆடிட்டர் குரு மூர்த்திக்கும், சுப்ரமணியசாமிக்குமே போட்டி என்பது தெரியவந்தது. ஆடிட்டர் குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. பின்னணி. மறைந்த துக்ளக் ஆசிரியர் ‘சோ’வின் வாரிசாக அடையாளங்காட்டப்பட்டவர். ஒன்றிய அரசில் யார், யாருக்கு எந்தெந்த பதவிகள் அளிப்பது, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களை எந்தெந்த வகையில் தூக்கி நிறுத்துவது, திராவிட எதிர்ப்பு அரசியலுக்கு தனது வித்தைகளைக் காட்டுவதுடன் இந்தியாவின் பெரு முதலாளிகளின் கணக்குத் தணிக்கையாளராகவும் இருக்கிறார்.
சுப்ரமணிய சாமியோ பி.ஜே.பி.க்குள்ளேயே இருந்துகொண்டு பா.ஜ.க.வுக்கு நிதி வழங்கும் பெரும் பணவசதி கொண்ட குரூப்புக்கு ஆதரவாக அரசியல் லாபி நடத்துபவர். இந்த மகானும் தமிழர்களுக்கு, தமிழர் பண்பாடு கலாச்சாரத்துக்கு, இவற்றுக்கு எதிராக நுணுக்கமான வகைகளில் தனது வித்தைகளைக் காட்டுவதுடன், இவர் சென்ற இடங்கள் அனைத்தும் எந்த நிலைமைக்கு ஆளாகின என்பதற்கு இவரது கடந்தகால அரசியல் அணுகுமுறையே ஆதாரமாக உள்ளது. மறைந்த ‘ஜெ.’இவருக்கு துரத்தித் துரத்திக் கொடுத்த வரவேற்புகள் ஊர் அறிந்த கதைதான்.
இவர்களின் இந்தப் போட்டிக்குக் காரணமே சங்கர மடத்தின் கோடிக்கணக்கான பணமும், சொத்துகளும்தான். இந்தியன் வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி ஒருவர், மடத்தின் மேனேஜிங் டிரஸ்டியாக இருந்தார். அவரை மாற்றிவிட்டு சங்கர மட செயலாளரான சர்மாவை டிரஸ்டியாக அறிவித்தனர். இவரை டிரஸ்டியாக நியமித்தது சங்கரமட படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சுந்தரேசன்.
மடத்தின் சூத்திரதாரி குருமூர்த்தி, ‘விஜய்மேத்தா’ என்பவரை அடுத்த சங்கராச்சாரியாராக கொண்டுவர முயற்சி செய்தார். அவர் பிராமணர் அல்லாதவர். கடுமையான எதிர்ப்புக் கிளம்பவே அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு சொத்துகளை விற்பனை செய்வதில் குருமூர்த்தி இறங்கியுள்ளார்.
ஏற்கனவே திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜை நூற்றி நாப்பது கோடிக்கு ஏ.சி.சண்முகத்துக்கு விற்றுவிட்டார்கள். 1996-ல் அன்றைய சங்கர மட ஜெயேந்திரர் 600 கோடி ரூபாய் பணத்தில் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் ‘சங்கர மகா வித்யாலாயா டீம்டு பல்கலைக்கழகம்’ உருவாக்கினார். தற்போது அதற்கான விற்பனை காலம். ஆயிரம் கோடி ரூபாய்க்கு விலைபேசிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் கடந்த நாலு வருடங்களாக காலேஜ் இயங்காமலே இருக்கிறது என்பதுதான்.
சங்கர மடத்துக்குள் நிலவும் போட்டி, பகை மற்றும் குழப்பங்களால் கடந்த ஒரு வருடமாகவே காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு மகான் விஜயேந்திரர் வருவதேயில்லை. அவர் வாரணாசியில் தங்கியுள்ளார். ஆனால், சுப்ரமணியசாமி அவரை விடுவதாயில்லை. விஜயேந்திரரை வாரணாசியிலேயே சென்று சந்தித்து விடுகிறார்.
ஆடிட்டர் குருமூர்த்தியோ தனது செல்வாக்கால் பி.ஜே.பி. ஆதரவில் சங்கர மடத்தைக் கையிலெடுத்து மொத்த சொத்துகளையும் பல நற்காரியங்களுக்கு செயல்படுத்த நினைக்கிறார் என்று அவரது காஞ்சிமட ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்.
சு.சாமியோ, எனக்குத்தான் சங்கரமட அதிகாரம் என்ற நோக்கத்தில் விஜயேந்திரரைக் கைக்குள் போட்டு காரியத்தைச் சாதிக்க நினைக்கிறார் என்கிறார்கள் சங்கரமடத்தின் மற்றுமொரு கோஷ்டியினர்.
இந்தக் குழப்பங்களில் சிருங்கேரி மடத்தின் பங்களிப்பும் உள்ளது என்பதுடன், விஜயேந்திரரின் பழைய கதைகளைக் கிண்டிக் கிளற ஆரம்பித்தால், அது பெரும் நாற்றமடிக்கும் சாக்கடை என்கிறார்கள் காஞ்சி நகரத்தைச் சேர்ந்தவர்கள். ‘அந்த ஈசனுக்கே வெளிச்சம்’ என்கிறார்கள் உண்மை பக்தர்கள்.