'சர்கார்' விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம். ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாளிலிருந்து சர்ச்சைகளும் ஆரம்பித்தன. விஜய், வாயில் சிகரெட்டுடன் இருந்த போஸ்டரில் ஆரம்பித்த பிரச்சனை பின்பு கதைத் திருட்டு விவகாரம் வரை சென்று ஒரு வழியாக பல சர்ச்சைகளுக்கு நடுவே தீபாவளி அன்று வெளியாகி உள்ளது. விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகிய முதல் இரண்டு படங்களும் சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவை.அந்த வரிசையில் ஓட்டு அரசியலை மையப்படுத்தி வெளியாகி உள்ளது இந்த சர்கார். ஒவ்வொரு தேர்தலிலும் நமக்குத் தெரியாமல் மறைவாக எத்தனையோ கள்ள ஓட்டுகள் விழுகின்றன. அந்த கள்ள ஓட்டுகள் மூலம் எந்த அளவு நாட்டில் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது என்பதையும், ஒவ்வொரு தனி மனிதனுடைய ஓட்டின் முக்கியத்துவத்தையும் பேசியுள்ள சர்காரின் 'ஒரு விரல் புரட்சி' வெற்றி பெற்றதா?
அமெரிக்காவில் GL என்ற ஒரு மிகப்பெரிய கார்ப்ரேட் கம்பெனியின் CEO வான விஜய், தமிழ்நாட்டில் நடக்கும் தேர்தலில் தன் ஓட்டை பதிவு செய்ய வருகிறார். வந்த இடத்தில் அவருடைய ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டு போட்டு விடுகிறார். இதனால் கொதித்தெழுந்த விஜய் தேர்தல் ஆணையம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜெயித்து விடுகிறார். பின்னர் தன் ஓட்டை மறு வாக்குப் பதிவில் போட அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நேரத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோர் விஜய் ஓட்டுப் போடுவதை தடுக்கின்றனர். பின் இந்த பிரச்சனை பெரிதாக மாறி விஜய் அரசியலில் இறங்க நேர்கிறது. விஜய் ஜெயித்தாரா, அவர் ஓட்டை பதிவு செய்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இதற்கு முன் வெளியான படங்களில் பொதுவாக ஒரு குறிப்பிட்ட மூன்று அல்லது நான்கு எபிசோடுகள் மிகவும் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும். அதுவே படத்தை வெற்றியும் பெற வைக்கும். சர்கார் படத்திலும் இதே போன்ற உத்திகளை பயன்படுத்தி ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் முருகதாஸ். அரசியல் படமான இந்தக் கதையில் வசனங்களின் பங்கு அதிகமாக இருக்கும். அருமையான வசன வரிகளை கொடுத்து நன்றாக ரசிக்க வைத்துள்ளார் வசனகர்த்தா ஜெயமோகன். இதுவே படத்திற்கு மிகப்பெரிய பலமாகவும் அமைந்துள்ளது. அதற்கு வசனகர்த்தாவான ஜெயமோகனுக்கு ஒரு மிக பெரிய சபாஷ். என்னதான் நல்ல வீரியமான வசனங்கள் படத்தில் இருந்தாலும் திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவாக இருப்பதால் ஆங்காங்கே அயர்ச்சியே மேலோங்குகிறது. குறிப்பாக முருகதாஸ் படங்களுக்கே உரித்தான ரசிக்க வைக்கும் வைக்கும்படியான எபிசோடுகள் இதில் இல்லாதது சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. துப்பாக்கியில் ஒரே நேரத்தில் 12 பேரை சுடுவது, நாயை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பது, கத்தியில் சில்லறை வைத்து போடும் சண்டை, கிளைமாக்ஸில் வரும் பிரஸ் மீட் என இவர்கள் கூட்டணியில் நாம் இதற்கு முன் பார்த்து மெய்சிலிர்த்த எபிசோடுகள் இதில் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சமகால அரசியலில் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை இவ்வளவு தைரியமாகவும், வெளிப்படையாகவும் சொல்லியதற்கு ஏ.ஆர்.முருகதாஸை கண்டிப்பாகப் பாராட்டலாம். தன் முந்தைய படங்களில் ஹீரோயிசத்தை விட கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த முருகதாஸ் இந்த படத்தில் சற்று ஹீரோயிசத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதை தவிர்த்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும். லாஜிக் என்பதெல்லாம் பொருட்டாகவே இல்லாமல்தான் இருக்கிறது. பியூஸ் மானுஷ், சபரிமாலா போன்ற செயல்பாட்டாளர்கள், சகாயம் ஐஏஎஸ் போன்ற பாத்திரங்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்பு போன்ற சம்வங்கள் இப்படி சமகால உண்மை விஷயங்களை இணைத்தது நல்ல ஐடியாதான். ஆனால், படத்திற்கு எந்த அளவு பலம் சேர்க்கிறது? நாயகன் பாத்திரத்தின் சின்ன செயற்கைத் தனத்தால் சீரியஸ் விஷயங்கள் அழுத்தம் தராமல் போகின்றன.
படத்தின் நாயகன் விஜய் தனது தோற்றத்திலும், வசன உச்சரிப்பிலும் நடிப்பிலும் மாஸ் காட்டியுள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் மிகவும் ஸ்டைலாக இருக்கிறார். படத்தின் பெரிய பலமான வசனங்களை இவர் சர்வசாதாரணமாக மக்களிடையே கடத்தும்படியாக உச்சரித்து தியேட்டர்களில் கைதட்டல்களை அள்ளுகிறார். நாயகி கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாக உள்ளார். மற்றபடி அவருக்கு படத்தில் அதிக வேலை இல்லை. முருகதாஸ், 'துப்பாக்கி'யிலிருந்தே தன் பட நாயகிகளை ரொம்பவும் பலவீனமாகப் படைக்கிறார். 'அறம்', 'மகளிர் மட்டும்' காலகட்டத்தில் 'ரமணா', 'கஜினி' எடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இப்படி செய்யலாமா?
அரசியல்வாதிகளாக வரும் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி ஆகியோர் அரசியல் வில்லத்தனத்தை காட்டி அருமையாக நடித்துள்ளனர். இதில் குறிப்பாக பழ.கருப்பையாவிற்கு மகளாக நடித்திருக்கும் வரலக்ஷ்மி சரத்குமாரின் பாத்திரம் படத்தின் கடைசிப் பகுதியை நன்றாக தூக்கி நிறுத்த முயன்றுள்ளது. இந்த கதாபாத்திரத்தையே படத்தின் ஆரம்பத்தில் இருந்து நன்றாக உபயோகப்படுத்தியிருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
படங்களில் எந்த அளவிற்கு ஹீரோவின் கதாபாத்திரம் வலிமையாக உள்ளதோ அதே அளவு வில்லன் கதாபாத்திரமும் வலிமையாக இருக்க வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த படம் கண்டிப்பாக ஒரு பிளாக் பஸ்டர் வெற்றி படமாக அமைய பிரகாசமான வாய்ப்புள்ளது. ஆனால் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை வலிமையாக படைக்காதது படத்திற்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கட்டத்தில் கதையையே வில்லனாக மாற்றியுள்ள சாமர்த்தியம் பாராட்டத்தக்கதென்றாலும் அது வலிமையாக இல்லாமல் போனது படத்தின் சுவாரசியத்தை வெகுவாக குறைத்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 'ஒரு விரல் புரட்சி' பாடல் மட்டும் சிலிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மற்ற பாடல்கள் வைக்கப்பட்ட இடங்கள் பாடல்களை ரசிக்கவிடவில்லை. பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பிரம்மாண்டத்தை கூட்டியுள்ளது. சிறிய சிறிய இடங்களில் கூட இவரது கேமரா அழகாக விளையாடி உள்ளது, படத்திற்கு வலு சேர்த்துள்ளது.
சர்கார் - அரசியல் பேசுகிறது, நமது வாக்களிக்கும் உரிமையின் முக்கியத்துவத்தை கூறியுள்ளது, விஜய் ஸ்டைலாக ஆக்டிவ்வாக இருக்கிறார். ஆனால், இவை மட்டும் படத்திற்குப் போதுமா?விஜய்யின் இந்த ஒரு விரல் புரட்சி பேச்சு வடிவில் இருக்கும் முழுமை செயல் வடிவில் இல்லை.