Skip to main content

சமுத்திரக்கனியின் சமூக அக்கறை எந்த எல்லைக்கு செல்கிறது? நாடோடிகள் 2 - விமர்சனம்

Published on 02/02/2020 | Edited on 04/02/2020

'நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்' என்ற நட்பு... நேர்மறை எண்ணங்கள், வசனங்கள்... விறுவிறுப்பான சேசிங்... இயல்பான, வாழ்க்கையுடன் கலந்துள்ள நகைச்சுவை... சிலிர்க்க வைக்கும் 'சம்போ சிவ சம்போ'... ஆங்காங்கே அழுத்தமான அட்வைஸ்... காதலர்களை, அவர்களுக்கு உதவும் நண்பர்களை புதிய கோணத்தில் பார்த்தது... என பல விதங்களில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி கவர்ந்தது 'நாடோடிகள்'. 2009இல் வெளிவந்த அந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக வந்துள்ளது 'நாடோடிகள் 2'. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அல்லாமல் 'காதலை சேர்த்து வைத்து காதலர்களை பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் நண்பர்கள்' என்ற அடிப்படை கருவை மட்டும் கொண்டு 'நாடோடிகள் 2'வை  உருவாக்கியுள்ளார் சமுத்திரக்கனி. ஆச்சரியங்கள் தருகிறதா, ஆடியன்ஸை கவர்கிறதா?

 

sasikumar



பொதுக்கழிவறை கட்ட தன் சம்பளத்தை கொடுக்கும், எந்தப் பிரச்னை என்றாலும் போராட்டத்தில் இறங்கும், சொந்த வாழ்க்கையை விட பொது வாழ்க்கை முக்கியமென்று நினைக்கும் போராளி இளைஞன் ஜீவா (சசிகுமார்). சமூக சேவைக்காக உயிர் துறந்த கம்யூனிஸ்ட் தந்தையின் மகனான ஜீவாவின் சமூக செயல்பாடுகளில் துணை நிற்கும் நண்பர்களாக அஞ்சலி, பரணி, மூத்தவர் என்று அழைக்கப்படும் பெரியவர் மற்றும் சிலர். சாதியற்ற ஒரு இளம் தலைமுறையை உருவாக்கும் முயற்சியில் 'நாமாவோம்' என்ற இயக்கத்தை தொடங்கி செயல்படும் சசிகுமாருக்கு தான் சார்ந்த சாதியிலிருந்து கடும் எதிர்ப்பு வருகிறது. தான் ஈடுபடும் சமூக செயல்பாடுகளாலேயே அவருக்குப் பெண் கொடுக்க மறுக்கிறார்கள். இப்படி செல்கையில் தன்னை தேடி வந்து பெண் கொடுப்பவர்களை நம்பி திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்துதான் தெரிகிறது, அந்தப் பெண் (அதுல்யா) ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை (இசக்கி பரத்) காதலிக்கிறார் என்பது. சசிகுமார் என்ன முடிவெடுக்கிறார், அதன் விளைவுகள் என்ன என்பதே நாடோடிகள் 2.

தமிழகத்திற்கு நல்லதை சொல்வது, இளைஞர்களை நல்வழியில் பயணிக்கத் தூண்டுவது, கெட்டதை சாடுவது தனது கடமை என்று ஏற்றுக்கொண்டு படம் எடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி. ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வகையில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்கவேண்டும் என்ற அவரது தவிப்பு பாராட்டப்பட வேண்டியது. சசிகுமார், 'நாடோடிகள்' படத்தில் இருந்தது போன்ற தோற்றத்திலிருந்து பெரிய மாற்றமில்லாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. சமுத்திரக்கனியின் கருத்துகளை பேச சரியான நாயகனாக இருக்கிறார் சசிகுமார். அவரிடமும் அந்த தவிப்பு, துடிப்பு தெரிகிறது. 'செங்கொடி'யாக வரும் அஞ்சலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் புகழ்பெற்ற ஜூலி ஸ்டைலில் அறிமுகமாகிறார். வெளிப்படையான பேச்சு, தெளிவான சிந்தனை கொண்ட இளம் பெண்ணாக அஞ்சலி கவர்கிறார். பரணி, மூத்தவர் உள்ளிட்ட நண்பர்களின் இயல்பான சில உரையாடல்கள் கவர்கின்றன. சசிகுமார் - அஞ்சலி இடையே காதல் உருவாகும் தருணம், 'அதுவா அதுவா' பாடல் ஆகியவை ரசிக்கவைக்கின்றன. சசிகுமார் - அஞ்சலி இருவரும் ஒரு அழகான சோசியல் ஆக்டிவிஸ்ட் ஜோடியாகக் கவர்கிறார்கள். 'பேனர் சின்னமணி' இந்த முறை செல்பியுடன் வந்து நம்மை சிரிக்க வைக்கிறார். ஆனால் இத்தனை விஷயங்களையும் பின்னால் தள்ளி முன் வந்து நிற்கிறது சமுத்திரக்கனியின் சமூக அக்கறை பிரச்சாரம்.
 

 

anjali



சாதி ஒழிப்பு என்பதையே படத்தின் மைய நோக்கமாகக் கொண்டு கதை, திரைக்கதையை அமைத்தது நல்ல விஷயம்தான். ஆனால், அதைத் தாண்டி இருபதுக்கும் மேற்பட்ட விஷயங்கள் பேசப்பட்டிருப்பதுதான் படத்திற்கு பிரச்னையாக அமைகிறது. உடுமலைப்பேட்டை சங்கர் - கவுசல்யாவுக்கு நடந்த கொடூரம், ஜல்லிக்கட்டு போராட்டம், அதில் போலீஸ் அராஜகம், காவல்துறை பணியில் சேர்ந்த திருநங்கை, நீட் தேர்வு, செங்கொடி என்ற போராளி, கந்தசாமி என்ற நல்ல அதிகாரி, கர்ப்பிணியை தாக்கிய டிராபிக் போலீஸ், சாதியற்றவராக அறிவுத்துக்கொண்ட பெண்... இன்னும், இன்னும் சமீப காலங்களில் தமிழகத்தில் நடந்த நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் அனைத்தையும் லிஸ்ட் போட்டு காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். இந்தக் காட்சிகள், இயல்பாகப் பொருந்தாமலும் கதைக்குத் தேவையான, முக்கிய கதையுடன் தொடர்புடைய காட்சிகளை விட அதிகமாகவும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதுதான் படத்திலிருந்து நம்மை மிகவும் தள்ளி வைக்கிறது. உண்மையில் படத்தின் மையக்  கதை சார்ந்து நடக்கும் காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன, ஆனால் அவை குறைவாக இருக்கின்றன.


சசிகுமார், படத்தின் தொடக்கத்தில் இருந்தே ஒரு தகிப்புடனே இருக்கிறார். அடிநெஞ்சில் இருந்து அறிவுரைகளை ஆவேசமாக சொல்கிறார். பிற முக்கிய நடிகர்களின் நடிப்பு படத்திற்குத் தேவையான அளவில் இருக்கிறது. தலைவர்கள் படம் ஒட்டப்பட்ட தட்டியை ஏந்திக்கொண்டு, ஒரு கூம்பை ஒலிபெருக்கியாக்கி நம் ஒவ்வொருவரின் மனக்குமுறலாக ஒலிக்கும் 'பிச்சைக்காரன்' மூர்த்தி மனதில் நிற்கிறார். இவர் போல் நம் பிரச்னைகளை பேசுவதையே வாழ்க்கையாக வைத்திருக்கும் எத்தனையோ பேரை சற்றும் கண்டுகொள்ளாமல் நகரும் நம்மை உறுத்துகிறது இவரது பாத்திரப்படைப்பு. சமுத்திரக்கனியின் ஸ்பெஷல் அம்சமாக புதுப்புது நடிகர்களின் தேர்வு இருக்கும். அப்படி வரும் சாதி சங்கத் தலைவர் பாத்திரம் உள்ளிட்ட சிலரது நடிப்பில் செயற்கை தன்மை இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் மெலடிகள் மிக அழகாக மலர்ந்து வருகின்றன. அதிரடி இசை பாடல்கள் கைகூடவில்லையென்றே தோன்றுகிறது. பின்னணி இசை பதற்றத்தைக் கூட்டுகிறது. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது. துரத்தல் காட்சிகளில் மேலும் கீழும் புகுந்து வருகிறது. உடுமலைப்பேட்டை சங்கர் - கவுசல்யாவுக்கு நடந்த அந்த கொடூர சம்பவத்தை நினைவுபடுத்தும் அந்தக் காட்சியின் படமாக்கல் ஒரு நிமிடம் பதற வைக்கிறது.        

 

sasikumar and team



க்ளைமாக்ஸை நெருங்கும் வேளையில் முதல் பாகத்தின் 'சம்போ சிவ சம்போ' பாடல் ஒலிக்கும்போது நமக்கு உண்மையில் ஒரு சிலிர்ப்பு ஏற்படுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஏற்படும் அந்த சிலிர்ப்புக்கு இசை மட்டும் காரணமல்ல மிக மிக இயல்பாகப் பொருந்தி, நம்மை நெருங்கி, விறுவிறுவென நகர்ந்த அந்த திரைக்கதையும்தான். இத்தனை ஆண்டுகளில் சமுத்திரக்கனியிடம் சமூக அக்கறை பெருகி அந்த இயல்புத்தன்மை குறைந்திருக்கிறது. அது படத்தின் முக்கிய கதையை கொஞ்சம் சமரசம் செய்யும் எல்லைக்கு செல்கிறது. 'நாடோடிகள்' ஏற்படுத்திய சிலிர்ப்பை 'நாடோடிகள் 2' ஏற்படுத்தவில்லை. ஆனாலும், பார்க்கத்தக்க படம்தான்.            

                          

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னணி நடிகையுடன் கூட்டணி - ஹீரோயின் சப்ஜெக்டை கையிலெடுத்த சசிகுமார்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
sasikumar direct nayanthara movie

அயோத்தி பட வெற்றியைத் தொடர்ந்து உடன் பிறப்பே இயக்குநர் சரவணகுமார் இயக்கும் நந்தன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் கருடன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஃப்ரீடம் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்துள்ளார். 

இதனிடையே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் பக்கம் திரும்பியுள்ள சசிகுமார், குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸாக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நயன்தாராவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

sasikumar direct nayanthara movie

நயன்தாரா தற்போது, சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூபர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Next Story

“சுழற்சியை நோக்கி நகரும் விஜய்யின் பின்னால் நான் நிற்பேன்” - சமுத்திரக்கனி திட்டவட்டம்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
samuthirakani about vijay political entry

நடிகர் சமுத்திரக்கனி ஹீரோ, வில்லன், முக்கிய கதாபாத்திரம் எனப் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிரபு திலக் தயாரிப்பில் என்.ஏ. ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘யாவரும் வல்லவரே’ படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யோகி பாபு, ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் நேற்று (15.03.2024) திரையரங்குகளில் வெளியானது. இதையொட்டி நக்கீரன் ஸ்டூடியோவிற்கு சமுத்திரக்கனி, இயக்குநர் ராஜேந்திர சக்கரவர்த்தி, இசையமைப்பாளர் ரகுநந்தன் ஆகியோர் பேட்டி கொடுத்துள்ளனர்.  

அப்போது விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “நான் எப்போதும் விஜய்க்கு ஆதரவு தருவேன். ஒரு படத்துக்கு 200 கோடி சம்பாதிக்கக் கூடிய மனிதன், நடிக்கிறதை நிறுத்துறேன் என சொல்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும். தெலுங்கில் பவன் கல்யாணுடன் வேலை பார்த்திருக்கிறேன். அவரும் அரசியல் தளத்தில் தான் இருக்கிறார். அவர் கூட அப்படி சொல்லவில்லை. கையில் மூனு படம் வச்சிருக்கார். தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களும் அரசியலுக்கு வந்திருக்காங்க. வரேன்னு சொல்லியிருக்காங்க. யாருமே நடிப்பை நிறுத்தவில்லை. விஜய் முழுக்க முழுக்க மக்களுக்காக சேவை செய்கிறேன் என சொல்கிறார். இப்படி சொல்கிற தைரியம் யாருக்குமே வரவில்லை. அந்த தைரியத்திற்கே முதலில் ஒரு சல்யூட். அதன் பிறகு என்ன வேணும்னாலும் குறை சொல்லலாம்.  

படம் இல்லாமல் தோத்து போய் அவர் வரவில்லை. அவர் நிறைய சம்பாதிச்சு வச்சிருக்கார். ஏதோ ஒன்னு செய்வோம் என்றுதானே வருகிறார். அவருக்காக 100 தயாரிப்பாளர்கள் கூட காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சூழலில் அவர் வந்திருப்பது மிகப் பெரிய விஷயம். அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகள், நல்ல விதமாக அமைய வேண்டும். அதற்கு இந்த பிரபஞ்சம் ஆதரவு தர வேண்டும். எல்லாம் கூடி வந்து அவர் நினைக்கிறது இந்த மக்களுக்கு போய் சேரணும். நான் ஒவ்வொரு முறையும் சொல்வதுதான், குறிப்பிட்ட காலம் வரை இந்த சமூகத்திலிருந்து வாங்குங்க. ஒரு காலத்திற்கு பிறகு வாங்கினதை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுங்க. அதுதான் நீ சமூகத்திற்கு வந்ததற்கான ஒரு சுழற்சி. அதை நோக்கி ஒரு மனிதர் நகர்கிறார் என்பது சந்தோஷம். நல்ல தளத்தில் அவர் இயங்கினால் பின்னால் போவதில் தப்பில்லை. நான் கூட போவேன். அதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம். 

எல்லா வகையிலும் தமிழக இளைஞர்கள், மக்கள் அனைவரும் பதட்டமாகத்தானே இருக்காங்க. குழப்பமா, சர்ச்சையோடே ஒரு பீதியில் தானே இருக்காங்க. அந்த பீதியை சரி செய்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பக்கூடிய நிலைக்கு யார் வந்தாலும், அவங்க பின்னாடி நிற்பேன்” என்றார். முன்னதாக விஜய் தனது கட்சி பெயர் அறிவித்தபோது, சமுத்திரக்கனி அவரது எக்ஸ் பக்கத்தில், “திரை உலகின் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் பணியாற்ற வந்த தைரியமான முதல் மனிதன். பிரபஞ்சம் உம்மை வெல்லச் செய்யட்டும். உம் கனவுகள் மெய்ப்படட்டும். வாழ்த்துக்கள் சகோதரா ” எனக் குறிப்பிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.