'ஏ ராசாத்தி... ரோசாப்பூ... வா வா வா...'
'கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி...'
'ஓ பாப்பா லாலி, கண்மணி லாலி...'
போன்ற பாடல்கள் ஒலிக்கும் 'ராஜகீதம் மியூசிகல்ஸ்'! இந்தப் பெயரிலேயே தமிழகத்தில் நூறு ஆடியோ கேஸட் கடைகள் இருந்திருக்கும் 90களில். வேறு பெயர்களில் இளையராஜாவின் படம் வரையப்பட்ட பெயர்ப்பலகையுடன் எத்தனை ஆயிரம் இசையகங்கள் இருந்தன! அங்கு கூடியிருக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் காதலி கடக்கும் பொழுது தங்களுக்காகவே உருவாக்கப்பட்டதாக எண்ணி ஒரு பாடலை ஒலிக்கவிடுவர். பல காதல்கள் பிறந்ததற்கு இளையராஜாவின் பாடல்கள் காரணமாக இருந்துள்ளன. பல காதல்கள் பிரிந்த பின் இளையராஜாவின் பாடல்கள் மருந்தாக இருந்துள்ளன. இப்படியொரு காலகட்டத்தில், கொடைக்கானல் அருகே பூம்பாறை எனும் மலை கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதை எப்படியிருக்கும்? கவிதை போல, சாரல் போல... மாலை நேரம் போல... இதமாக இருக்குமல்லவா? எப்படியிருக்கிறது இயக்குனர் சரவண ராஜேந்திரனின் மெஹந்தி சர்க்கஸ்?
1992ஆம் ஆண்டு காலகட்டத்தில் பூம்பாறை கிராமத்தில் மியூஸிக்கல் கடை வைத்துக்கொண்டு ஊரில் உள்ள இளைஞர்களின் காதலுக்கு தனது திரையிசையறிவால் உதவி வரும் ஜீவா என்ற இளைஞனாக மாதம்பட்டி ரங்கராஜ். ஊருக்குள் பெரிய மனிதர், ஆனால் சாதி வெறி மனதிற்குள் ஊறியவர் ஜீவாவின் தந்தை. வடக்கிலிருந்து வந்து ஊர் ஊராக சர்க்கஸ் அமைத்து சில நாட்கள் தங்கிப் பிழைக்கும் குழுவுடன் அந்த ஊருக்கு வருகிறாள் மெஹந்தி (ஸ்வேதா திரிபாதி). சர்க்கஸில் கத்தி வீச்சு மரண விளையாட்டில் உயிரைப் பணயம் வைத்து நிற்கும் அவளை கண்டதும் காதல் கொள்கிறான் ஜீவா. என்ன நடக்குமென்று நமக்குத் தெரியுமோ அது எல்லாமே நடக்கிறது. இறுதியில் எங்கு போய் முடிகிறது என்பதில்தான் சற்றே வேறுபடுகிறது இந்த மெஹந்தி சர்க்கஸ்.
மலை கிராமம்... கிராமத்து பேருந்துகள்... காதல் சொல்ல இளையராஜா பாடல்கள் என ரம்மியமான ஒரு வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் சென்று ஆரம்பிக்கிறது படம். சிறிய அளவு சர்க்கஸ்களில் பணிபுரியும் கலைஞர்களின் வாழ்க்கையை சற்று அருகே சென்று பார்க்கும் அனுபவத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர். அப்பா மாரிமுத்து, ஃபாதர் வேல ராமமூர்த்தி, சர்க்கஸ் உரிமையாளரான நாயகியின் தந்தை, கத்தி வீச்சு ஜாதவ் என படத்தின் இரண்டாம் பலம் கதாபாத்திரங்களும் அவற்றுக்கான நடிகர்கள் தேர்வும்தான். மிக இயல்பாக எளிமையாக நடித்திருக்கிறார்கள். நாயகி மெஹந்தி பாத்திரம், அந்த வரிசையில் முதன்மை. இத்தனை அருமையான பாத்திர படைப்புகளின் நடுவே நாயகனின் பாத்திரம் சற்றே பலவீனமாகத் தெரிகிறது. அதற்கு முக்கிய காரணம் நடிப்பு. மாதம்பட்டி ரங்கராஜ் நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய இடம் சரியான இடம். ஆனால், போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம். ஸ்வேதா திரிபாதி வடஇந்திய வாடையுடன் பேசும் தமிழும், அவரது நடிப்பும் மெஹந்தி பாத்திரத்தை மேலும் அழகாக்குகின்றன.
படத்தின் முதல் பலம் கதை நடக்கும் இடம் மற்றும் ஒளிப்பதிவு. நல்ல அனுபவத்தைத் தருகிறது செல்வகுமாரின் ஒளிப்பதிவு. "ஒவ்வொருத்தருக்கு மேலயும் ஒரு கத்தி தொங்கிக்கிட்டுருக்கு" உள்பட ஃபாதர் பேசும் பெரும்பாலான வசனங்கள், "எனக்கு இதயம் மட்டும் உங்க அளவுக்குதான்" என சர்க்கஸில் பணிபுரியும் உயரம் குறைந்தவர் பேசும் வசனம், "மனசுல இருக்கறவன்தான் ஹஸ்பண்ட்"... உள்பட வசனங்கள் முழுவதும் ராஜு முருகனின் மிடாஸ் டச் தெரிகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் ஒவ்வொரு பாத்திரமும் ஒரு டச் வைத்து, தத்துவத்துடனே பேசுவது சற்றே நெருடுகிறது. மலை கிராமத்தில் ஊறியிருக்கும் சாதி, மத வெறியை, உணர்வை அமைதியாக, அழுத்தமாகப் பேசியிருக்கிறார் சரவணன்.
தன் பெண்ணைக் கேட்டு வருபவனுக்கு அப்பா வைக்கும் கத்திக்குத்து சேலஞ், மகன் செய்யும் தவறுக்கெல்லாம் அவனது நண்பனை அடிக்கும் அப்பா, 'கேண்டி' என ஃபாதருக்குப் பெயர், அதற்கொரு அழகான பின்னணி, ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஆர்.ஜே.விக்னேஷ் அடிக்கும் கமெண்ட் என சின்னச் சின்ன சுவாரஸ்யங்களை நிறைத்திருக்கிறார்கள். இத்தனை இருந்தும் படத்தின் மையப்புள்ளியாக நாயகன் - நாயகி காதல் நம் மனதில் ஒட்டவில்லை. காதல் வந்த விதமும், வளர்ந்த விதமும் அழுத்தமாக நம்மில் பதியவைக்கப்படாமல் போனதுதான் காரணம். இரண்டாம் பாதியில் நாயகன் செல்லும் நீண்ட பயணம் போலவே மாறும் படம் சென்று முடியும் இடம் சற்று தடுமாற்றம்.
இளையராஜா பாடல்களுடன் இணைந்து மலை கிராமத்தில் குளிர்காற்றாய் பரவுகிறது ஷான் ரோல்டனின் இசை. பின்னணி இசையும் பாடல்களும் மென்மையாக வருடிச் செல்கின்றன. 'கோடி அருவி' பாடல் மட்டும் மனதோடு தேங்கி நிற்கிறது. பிலோமின் ராஜின் படத்தொகுப்பு படத்தை சீராகக் கொண்டுசெல்கிறது.
சரி, கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல, இப்படிப்பட்ட இடத்தில் நடக்கும் இப்படிப்பட்ட கதை ஒரு கவிதை போல, சாரல் போல, மாலை நேரம் போல இதமாக இருக்குமல்லவா? மெஹந்தி சர்க்கஸ், கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது. 'ஏதோ ஒன்னு மிஸ் ஆகுதே' என்ற உணர்வு மட்டும் குறையாக இருக்கிறது. பெரிய தாக்கமில்லாத இதமான ஒரு அனுபவம் இந்த 'மெஹந்தி சர்க்கஸ்'.