"உங்க ஃபோன் தர்றீங்களா... ஒரு கால் பண்ணணும்" என்று, தான் திருமணம் செய்யப்போகும் பெண்ணிடம் ஃபோனை வாங்கி அந்த மெஸேஜை டெலிட் பண்ணியிருந்தால் எளிதில் முடியும் வேலை. புறாவுக்கு போரா?

2002ஆம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் இயக்குனர் சக்தி சிதம்பரத்தின் வெற்றிப் படங்களில் ஒன்று. இது மகத்தான நகைச்சுவைப் படம் என்று பாராட்டப்பட்ட படமில்லையானாலும் வெற்றிகரமான காமெடிப் படமென்பதால் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்பொழுது சார்லி சாப்ளின் 2, இதன் தொடர்ச்சியாக அல்லாமல் பிரபுதேவா - பிரபு காம்போ, கதைக்களத்தில் சில ஒற்றுமைகளுடன் வேறு படமாக வெளிவந்திருக்கிறது சார்லி சாப்ளின் 2.
ஆன்லைன் மேட்ரிமோனி நிறுவனம் நடத்தும் பிரபுதேவாவுக்குத் திருமணம் செய்ய பெண் தேடுகிறார்கள் பெற்றோர். சமூக சேவகியான நிக்கி கல்ராணிக்கு ஒரு பெரிய நோய் இருப்பதாகவும் அதனால் பதினைந்து நாட்களில் உயிரிழக்கப்போவதாகவும் நினைத்து அவரையே திருமணம் செய்ய விரும்புகிறார் பிரபுதேவா. பிரபுவின் மகளான நிக்கி கல்ராணி நோயாளி இல்லையென்பது தெரிய வருகிறது. ஆனால், பிரச்சனை வேறு விதத்தில் வருகிறது. அந்தப் பிரச்சனையையும் பிரச்சனை தீர்வதையும் காமெடி சரவெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சக்தி சிதம்பரம்.

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவின் குரலில் தொடங்கும் படம் முதலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. அதில் 'எத்தனை வருஷமானாலும் அதே வயசுதான்' என்று பிரபுதேவா அறிமுகப்படுத்தப்படுகிறார். உண்மைதான், வயதாவதே தெரியவில்லை, முதல் பகுதியில் இருந்த பிரபுதேவாதான் இதிலும் தெரிகிறார். ஒவ்வொரு பாடலிலும் அவரது ஆட்டம்தான் ஹைலைட். பிரபு, தேடித் தேடி உண்ணும் ஃபுட்டியாக, நாயகி நிக்கியின் டேடியாக வருகிறார். தன்னைத் தானே கிண்டல் செய்துகொள்கிறார், மிக அளவாகவே சிரிக்கவைக்கிறார். சார்லி சாப்ளின் என்ற டைட்டிலுக்காக சில காட்சிகளில் சார்லி சாப்ளின் பாணியில் நடித்திருக்கிறார். அவர் நன்றாக நடித்தாலும் காட்சி முழுதாக ஈர்க்கவில்லை. நிக்கி கல்ரானி, முறைப்பதும், நடனமாடுவதுமென நாயகி வேலையை நல்லபடியாக செய்திருக்கிறார். விவேக் பிரசன்னா, அரவிந்த், சிவா, உள்ளிட்ட பலரும் படத்தில் இருக்கும் காமெடி படமென்றாலும் சிறிதே சிரிக்கவைப்பவர் ரவி மரியா மட்டுமே.
படத்தில் அத்தனை குழப்பங்களையும் உருவாக்கும் அடிப்படை பிரச்சனை மிக பலவீனமாக இருப்பதால் அதன் மேல் நடக்கும் காமெடிகள் எளிதில் ரசிக்கவைக்கவில்லை. அதைத் தாண்டி சிரிக்க சில காட்சிகள் இருப்பது ஆறுதல். திருப்பதியில் HCL கட்டிடம், புது ஹாஃப் கோட் போட்டுகொண்டு ஃபுல் மேக்கப்புடன் செம்மரக்கட்டை வெட்டும் கடத்தல்காரர்கள், சாலையில் செல்பவர்களிடம் 'ஐ லவ் யூ' சொல்லி ரியாக்ஷன் பார்க்கும் சைக்காலஜி மாணவிகள், நம்பவே முடியாத குழப்பங்கள் என படம் முழுவதுமே சமரசங்களுடன் சற்று அலட்சியமாக எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

செந்தில் - ராஜலக்ஷ்மி உபயத்தால் 'சின்ன மச்சான், செவத்த மச்சான்' செம்ம ஹிட்டாகிவிட்டது. 'ஐ வாண்ட் டு மேரி யூ மாமா' பாடல் ஆட வைக்கும் ரகம். மற்றபடி அமரிஷின் இசை இன்னும் கொஞ்சம் அளவாக இருக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஓவரான இசையை கொடுத்திருக்கிறார், கொஞ்சம் பொறுமை காக்கலாம். இசை என்பது அமைதியையும் சேர்த்தது என்பதை அம்ரிஷ் சற்று கருத்தில் கொள்ளவேண்டும். சௌந்தர் ராஜனின் ஒளிப்பதிவு திருவிழா போல வண்ணமயமாக இருக்கிறது. திருப்பதி காட்சிகள் நடப்பது திருப்பதியில் என நம்பவைக்க முயற்சி செய்திருக்கிறது. படத்தொகுப்பாளர் சசிக்குமார் காட்சிகளை தொகுத்த விதத்திலும் சில எஃபெக்டுகளை பயன்படுத்தியும் படத்திற்கு காமெடி டோன் தந்திருக்கிறார்.
சார்லி சாப்ளின் 2 - சில நகைச்சுவை காட்சிகளும் சின்ன மச்சான் பாடலும். அது மட்டும் போதுமென்றால் ஓகே.