எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், எம்.ஜி.ஆருக்கும் கங்கை அமரனுக்கும் இடையேயான நட்பு குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
”மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ஓர் உன்னதமான செயலைப் பற்றி உங்களுக்கு கூறுகிறேன். அதைத் தெரிந்து கொண்ட பிறகு அவர் மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்பு பல மடங்கு உயரும். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது கலைவாணர் அரங்கத்தில் கலைமாமணி விருது வாங்கும் நிகழ்வு நடைபெற்றது. முதல்வர் எம்.ஜி.ஆர்.தான் அனைவருக்கும் விருது வழங்கினார். அந்த நிகழ்வில் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இசைக்கச்சேரிக்குத் தலைமை கங்கை அமரன்.
எம்.ஜி.ஆருக்கும் கங்கை அமரனுக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. கங்கை அமரன் உரிமையோடு எம்.ஜி.ஆரோடு பேசக்கூடியவர். அதேபோல எம்.ஜி.ஆரும் கங்கை அமரனோடு ரொம்பவும் உரிமையாகப் பழகுவார். கங்கை அமரனோடு காரில் செல்லும்போதெல்லாம் ’நீ இப்ப என்ன பாட்டு பண்ண, கொஞ்சம் பாடு...’ என்று சொல்லி, அவர் பாடுவதைக் கேட்டு எம்.ஜி.ஆர். ரசிப்பாராம்.
கலைமாமணி விருது விழாவிற்கு சீக்கிரமே வந்த எம்.ஜி.ஆர். கங்கை அமரனின் முழு இசைக்கச்சேரியையும் கேட்டு ரசிக்கிறார். அந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த கங்கை அமரனின் தயார் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறார். இசைக்கச்சேரி முடிந்த பிறகு, விருது வழங்கும் நிகழ்வு தொடங்குகிறது. நிகழ்ச்சி முடியும் தருவாயை அடைந்ததும் எம்.ஜி.ஆர். கிளம்ப தயாராகிறார். அப்போது, கங்கை அமரன் தன்னுடைய அம்மாவை எம்.ஜி.ஆருக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறார். உடனே மேடையேறிய கங்கை அமரன், எம்.ஜி.ஆரிடம் சென்று அம்மா வந்துருக்காங்க, நிகழ்ச்சி முடியவும் உங்களிடம் அழைத்துவந்து அறிமுகப்படுத்தட்டா என்று கேட்கிறார். அம்மா எங்க இருக்காங்க என்று எம்.ஜி.ஆர் கேட்டதும் முன்வரிசையில் இருந்த அம்மாவை நோக்கி கங்கை அமரன் கைகாட்டுகிறார்.
எம்.ஜி.ஆர். உடனே மேடையை விட்டு இறங்கி கங்கை அமரனின் அம்மா இருந்த இடத்திற்கு வந்துவிட்டாராம். வணக்கம் சொல்லிவிட்டு அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார். அதை பார்த்து கங்கை அமரனே ஷாக்கானாராம். எம்.ஜி.ஆர் இருக்கும் உயரம் என்ன என்று யோசித்துப் பாருங்கள், சாதாரண ஒருவர் காலில் விழுந்து அவர் ஆசீர்வாதம் வாங்குவதெல்லாம் எவ்வளவு பெரிய விஷயம். தாய்க்குலத்தின் மீது பெரிய மரியாதை கொண்டவர் என்று எம்.ஜி.ஆரை சொல்வார்கள். எம்.ஜி.ஆரின் இந்தப் பணிவு, அடக்கம், மூத்தவர்களுக்கு கொடுக்கும் மரியாதை ஆகிய குணங்கள்தான் அவரை கடைசிவரை உயர்ந்த இடத்தில் வைத்திருந்தது. காலத்தைக் கடந்தும் மக்களது உள்ளங்களில் எம்.ஜி.ஆர். வாழ்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரிடம் இயல்பாகவே அமைந்திருந்த இத்தகைய உயர்ந்த பண்புகள்தான்”.