கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. சமீபத்தில் தனியார் யூ-ட்யுப் சேனல் ஒன்று, பிரபல கராத்தே மாஸ்டரான ஷிஹான் உசேனியிடம் நேர்காணல் எடுத்தது. அப்போது நெறியாளரின் வேண்டுகோளுக்கு இணங்கி, ஷிஹான் உசேனி கராத்தே கற்றுக்கொடுக்க முயற்சித்த போது நெறியாளர் பலமாகத் தாக்கப்பட்டார். வலி தாங்க முடியாமல் அந்த நெறியாளர் தடுமாறிய வீடியோதான் கடந்த இரு நாட்களாக அனைவருக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டர்.
யார் இந்த ஷிஹான் உசேனி?
பொதுவாக கராத்தே மாஸ்டராக அறியப்படும் ஷிஹான் உசேனி, நடிகர், வில்வித்தை வீரர், ஓவியர், சமையல் கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். 1986-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'புன்னகை மன்னன்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி நடிப்பில் வெளியான 'வேலைக்காரன்', ரஜினி நடித்த ஹாலிவுட் படமான 'பிளட் ஸ்டோன்', சரத்குமார் நடிப்பில் வெளியான 'வேடன்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
90-களின் காலத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் 'திடீர் சமையல்' எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 'வீட்டிற்குத் திடீரென உறவினர்கள் வந்துவிட்டால், அவசரகதியில் அவர்களுக்கு சமையல் செய்வது எப்படி' என்பதை மையமாக வைத்து வெளியான இந்த நிகழ்ச்சி, அன்றைய காலத்து இல்லத்தரசிகளிடையே மிகவும் பிரபலம். 2001-ஆம் ஆண்டு வெளியான 'பத்ரி' படத்தில் விஜய்க்கு பாக்சிங் பயிற்சியாளராக நடித்த கதாபாத்திரம், சினிமாவிலும் பெயர் வாங்கிக்கொடுக்கும்படியான பாத்திரமாக அமைந்தது. உலக சாதனை, கின்னஸ் சாதனை என அடிக்கடி இவர் செய்யும் சாகச சம்பவங்களுக்குப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அரசியல் ரீதியாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிக நெருக்கமானவர், ஷிஹான் உசேனி. அதே நேரத்தில் ஜெயலலிதாவுடன் மிக நெருக்கமாக இருந்த அவரது தோழியான சசிகலாவிற்கும் ஷிஹான் உசேனிக்கும் இடையே முரண்பாடு அதிகம்.
ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக இருந்த ஷிஹான் உசேனி, அவரது கவனத்தை ஈர்த்து, அவருடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டுமென்று செய்த செயல்கள் வித்தியாசமானவை. மூன்று முறை உலக கராத்தே போட்டியில் வெற்றி பெற்றுள்ள ஷிஹான் உசேனி, ஜெயலலிதாவை சந்திக்க வேண்டுமென்று பல்வேறு முயற்சிகள் எடுத்துள்ளார். அவையெல்லாம் தோல்வியில் முடிந்துபோக, நடுரோட்டில் தன்னுடைய கையில் நூற்றியொரு கார்களை ஏற்றி, அந்த நசுங்கிய கையில் வடிந்த ரத்தத்தின் மூலம் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வரைந்தார். இது ஜெயலலிதாவின் கவனத்திற்குச் செல்ல, ஷிஹான் உசேனியை அழைத்து அறிவுரை கூறிய ஜெயலலிதா, கராத்தே பயிற்சி மையம் தொடங்குவதற்காக அவருக்கு நிலம் வழங்கியதாக ஒரு பேச்சு உள்ளது.
ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது, அவர் சிறையில் இருந்து வெளிவர வேண்டும் என்பதற்காக தன்னைத் தானே சிலுவையில் அறைந்து பிரார்த்தனை செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை 350 மிலி ரத்தம் என எட்டு வருடங்களுக்கு தன்னுடைய உடம்பில் இருந்து ரத்தத்தை சேகரித்த ஷிஹான் உசேனி, 11.2லி ரத்தத்தால் ஜெயலலிதாவின் உருவச் சிலையை செய்தார். இது போன்ற தன்னுடைய செயல்களால் ஜெயலலிதா கடும் அதிருப்திக்கு உள்ளானதாகவும் பல முறை கண்டித்துள்ளதாகவும் ஒரு பேட்டியில் ஷிஹான் உசேனியே கூறியுள்ளார்.
ஜெயலலிதா குறித்து இலங்கை அரசு இணையதளத்தில் தவறாகச் செய்தி வெளியிட்டதை எதிர்த்து, இலங்கையின் அப்போதைய அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ஷேவின் உருவத்தை, பன்றியின் ரத்தத்தால் வரைந்து அதன் கீழே 'ராஜபிக்ஷே' என்று எழுதினார். கடந்த 2016-ஆம் ஆண்டு, தமிழக வில்வித்தை சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, அங்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, அனைத்து மக்கள் முன்னேற்ற அமைப்பு (AMMA) என்ற அமைப்பைத் தொடங்கினார்.
அவ்வப்போது தனது அதிரடியான மற்றும் வித்தியாசமான செயல்கள் மூலம் கவனம் பெறும் ஷிஹான் உசேனி, தற்போது இந்த வைரல் வீடியோ மூலம் கவனம் பெற்றுள்ளார்.