அஜித்குமார், த்ரிஷா , அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது.
இதுவரை அஜித், த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட முக்கியமான நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியிருந்த நிலையில் சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதில் இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே டப்பிங் பணிகளும் முழு வீச்சில் நடந்தது.
சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் அஜித் மற்றும் த்ரிஷாவின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. அதில் அஜித் உடல் எடையை குறைத்து ஸ்டைலிஷான லுக்கில் இருந்தார். த்ரிஷாவும் மாடர்ன் லுக்கில் இடம்பெற்றிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இப்போது இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் ஓன்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பிரபலமாகி பின்பு சில படங்களிலும் நடித்த ரம்யா இணைந்துள்ளதாக லைகா நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அஜித்துடன் ரம்யா இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.