'அரிமா நம்பி' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் ஆனந்த் சங்கர். இவர், தற்போது நடிகர் விஷாலை வைத்து 'எனிமி' திரைப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிர்னாலினி ரவி நடிக்க, ஆர்யா வில்லனாக நடித்துள்ளார். தமன் இசையமைக்கிறார். ஐதராபாத்தில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்திய படக்குழு, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்தது. இதையடுத்து, படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு கவனம் செலுத்திவருகிறது.
இந்த நிலையில், 'எனிமி' படத்திற்கான தன்னுடைய டப்பிங் பணியைத் தொடங்கிவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ள விஷால், டப்பிங்கின்போது எடுத்த ஒரு காணொளியையும் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இன்று (03.09.2021) மாலை இரண்டாம் பாடல் வெளியாகிறது.