மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஒரு நடிகை நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது புகார் கூறினார். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரனை நடந்தது. இதனிடையே அந்த நடிகை மீது சமீபத்தில் அவரது உறவுக்கார பெண் ஒருவர், தனக்கு சினிமாவில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாலியல் தொழிலுக்கு அனுப்பியதாக போக்சோ புகார் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில் 6 பேர் மீது புகார் கூறிய நடிகை தனது புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தாமாக முன் வந்து புகார் கொடுத்த ஒரு பெண்ணிற்கு அரசின் கவனக்குறைவாலும், பாதுகாப்பு இல்லாததாலும் தாங்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. சமூக வலைதளங்களில் என் மீது அவதூறு பரப்புகிறார்கள். நான் மனதளவில் சோர்வடைந்துவிட்டேன். எனவே நான் இனியும் தொடர்ந்து இந்த வழக்கை நடத்த விரும்பவில்லை. நான் குற்றமற்றவள். எனக்கு நீதி வேண்டும். என் மீதான போக்சோ வழக்கை முழுமையாகவும் விரைவாகவும் விசாரிக்க வேண்டும். நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு அரசுதான் பொறுப்பு” எனக் கூறியுள்ளார்.