இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் 1995அம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு கிட்டதட்ட 30ஆண்டுகளை நெருங்கும் வேளையில், சாய்ரா பானு ஏ.ஆர் ரஹ்மானை பிரிவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் தீர்க்க முடியாத இடைவெளி உருவானதாக சாய்ரா பானு தெரிவித்திருந்தார். இவரது முடிவு திரையுலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்பு ஏ.ஆர் ரஹ்மானும், “எங்களது திருமண பந்தம் 30 வயதை எட்டும் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக சென்றுவிட்டது” என தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார். இவர்களுக்கு கதிஜா மற்றும் ரஹீமா என 2 மகன்களும், அமீன் என்ற மகனும் உள்ள நிலையில் மகன் அமீன், “இந்த தருணத்தில் எங்களது தனியுரிமைக்கு மதிப்பு அளிக்குமாறு எல்லோரையும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவில் பேஸ் கிட்டாரிஸ்டாக பணியாற்றிய மோகினி டே என்பவர் அவரது கணவரை பிரிவதாக அறிவித்திருந்தார். இதனால் ஏ.ஆர் ரஹ்மான் பிரிவையும் இவரது பிரிவையும் தொடர்ப்பு படுத்தி பலரும் பலவிதமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர். இதையடுத்து சாய்ரா பானுவின் வழக்கறிஞர், அதற்கும் இதற்கும் எந்த சம்மதமும் இல்லை என விளக்கமளித்திருந்தார்.
இந்த நிலையில் ஏ.ஆர் ரஹ்மானின் மகன் அமீன், தனது தந்தை பிரிவு குறித்து வரும் தகவல்கள் தொடர்பாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “என் தந்தை ஒரு லெஜண்ட். அவருடைய பங்களிப்பை வைத்து நான் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் அவர் சம்பாதித்த மரியாதை மற்றும் அன்பு ஆகியவற்றை வைத்து சொல்கிறேன். அவரை பற்றி தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுவதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது அதிலிருக்கும் உண்மையின் முக்கியத்துவத்தை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து இதுபோன்ற தவறான தகவல்களில் ஈடுபடுவதையோ அல்லது பரப்புவதையோ தவிர்த்து விடுங்கள். அவருடைய கண்ணியத்தையும், நம் அனைவரிடமும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் போற்றிப் பாதுகாப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.