Skip to main content

“24 மணிநேரம் தான்...” - கெடு விதித்த விஷால்

Published on 10/08/2024 | Edited on 10/08/2024
vishal producers association issue

விஷால் தற்போது துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். இதனால் இப்படத்தின் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் தலைமை வகித்தார். 

சமீபத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் விஷால் மீது பணமோசடி குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2017-2019 ஆம் ஆண்டு வரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால், மீது எழுந்த குற்றச்சாட்டின் காரணமாகச் சங்கத்திற்குப் புதிதாக ஒரு அதிகாரியைத் தமிழக அரசு நியமித்திருந்தது. அவர் சங்கத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்க ஸ்பெஷலாக அதிகாரிகளையும், ஆடிட்டர்களையும் நியமனம் செய்திருந்திருந்தார். அந்த ஆடிட்டர்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் விஷால் தலைவராக இருந்த சமயத்தில், சங்க நிதியை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகவும் வரவு - செலவில் சுமார் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். முறைகேடாக பயன்படுத்திய அந்தத் தொகையை சங்கத்திற்கு திருப்பி கொடுக்க சொல்லியும் விஷால் பதிலளிக்காத காரணத்தால், இனிவரும் காலங்களில் அவரை வைத்து படம் தயாரிக்கவுள்ளவர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்த பிறகுதான் படத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது விஷால் மீது விதிக்கப்பட்ட ரெட் கார்ட் என சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. 

இதையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்க அறிக்கைக்கு, “இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த மூத்த உறுப்பினர்களின் கல்வி, மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்பதும உங்களுக்குத் தெரியாதா?. திரைத்துறையில் நிறைய வேலைகள் இருக்கிறது. இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் எனப் பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டியவை. அதை சரியாக செய்யுங்கள். விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். இதற்கு முன் திரைப்படங்களைத் தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் தயாரிப்பாளர்கள் என அழைக்கப்படுபவர்களே முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்” எனத் தனது எக்ஸ் தளப் பக்கத்தின் வாயிலாக பதிலளித்திருந்தார். 

இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விஷால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “சமீபத்தில் என் பெயரை குறிப்பிட்டு, என் மீது பல அவதூறுகளை சுமத்தி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெளியிடப்பட்ட பத்திரிகை செய்தி ஒன்று கண்டேன். அதில் காணும் ஸ்பெஷல் ஆடிட்டரின் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதுநாள் வரை சங்கம் சார்பாக என்னிடம் முறையாக எவ்வித விளக்கமும் கேட்கப்படாத நிலையில், தங்களின் இப்படி ஒரு பொய்யான பத்திரிக்கை செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த 2017-2019 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக அறுதிப் பெரும்பான்மையான தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றேன். 

சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில்கொண்டு, சங்க சட்டவிதிகளின் அடிப்படையில், சங்க பொறுப்பாளர்கள் அதில் செயலாளராக இருந்த கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புதல் தீர்மானங்களின்படி, ஆயுட்கால காப்பீடு திட்டம், ஓய்வூதியத் திட்டம், கல்வி உதவித் தொகை, மருத்துவ உதவித் தொகை, திருமண உதவித் தொகை மற்றும் தீபாவளி பரிசு ஆகிய பல்வேறு சிறப்பான உதவித் திட்டங்களை நிர்வாக உறுப்பினர்களின் ஆலோசனைப்படியும் செயற்குழு ஒப்புதல் பெற்ற தீர்மானத்தின் படியும் நாங்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்படுத்தியுள்ளோம்.

எந்தவித தவறும் செய்யாதபட்சத்தில் தாங்கள் என் மீது தீர்மானம் நிறைவேற்றியதாக பத்திரிகை செய்தி ஏற்புடையதல்ல என்பதை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது தனிப்பட்ட ரீதியில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் இக்கடிதம் பெற்ற 24மணி நேரத்திற்குள் தாங்கள் வன்மத்தினால் அனுப்பிய பத்திரிக்கை செய்தியை திரும்ப பெற்று பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் சட்ட ரீதியாக நான் எதிர் கொள்வேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்