நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளிலும் கவனம் செலுத்தி வரும் விஷால் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். இதற்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் தலைமை வகித்தார். அப்போது சங்க பணத்தை முறையாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்,நடந்த தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் விஷாலுக்கு ரெட் கார்டு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து நேற்று (27.07.2024) தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், விநியோக சங்கத்தினர், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் விஷால் குறித்து எடுத்த முடிவை கூறினர். அதற்கு விநியோக சங்கத்தினரும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். பின்னர், இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அதில், “கடந்த 2017-2019 ஆம் ஆண்டு வரை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால், மீது எழுந்த குற்றச்சாட்டின் காரணமாகச் சங்கத்திற்குப் புதிதாக ஒரு அதிகாரியைத் தமிழக அரசு நியமித்திருந்தது. அவர் சங்கத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்க ஸ்பெஷலாக அதிகாரிகளையும், ஆடிட்டர்களையும் நியமனம் செய்திருந்திருந்தார். அந்த ஆடிட்டர்கள் கணக்கு வழக்குகளை சரிபார்த்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் விஷால் தலைவராக இருந்த சமயத்தில், சங்க நிதியை தவறான முறையில் பயன்படுத்தியிருப்பதாகவும் வரவு - செலவில் சுமார் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். முறைகேடாக பயன்படுத்திய அந்தத் தொகையை சங்கத்திற்கு திருப்பி கொடுக்க சொல்லியும் விஷால் பதிலளிக்காத காரணத்தால், இனிவரும் காலங்களில் அவரை வைத்து படம் தயாரிக்கவுள்ளவர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்த பிறகுதான் படத்திற்கான பணிகளை தொடங்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க அறிக்கைக்கு, விஷால் பதிலளித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, “இது உங்கள் குழுவில் உள்ள கதிரேசனை உள்ளடக்கிய கூட்டு முடிவு என்பதும், அந்த நிதியானது தயாரிப்பாளர் சங்கத்தின் நலிந்த மூத்த உறுப்பினர்களின் கல்வி, மருத்துவ காப்பீடு, நலப்பணிகள் உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?. அதோடு அவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்குப் பண்டிகை காலங்களில் நலன் பெறும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. திரைத்துறையில் நிறைய வேலைகள் இருக்கிறது. இரட்டை வரிவிதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டியவை. அதை சரியாக செய்யுங்கள். விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார். இதற்கு முன் திரைப்படங்களைத் தயாரிக்காத, எதிர்காலத்திலும் தயாரிக்காமல் வெறும் தயாரிப்பாளர்கள் என அழைக்கப்படுபவர்களே முடிந்தால் என்னைத் தடுத்துப் பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.