நடிகர் விஷால், நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாக பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுமையாக திருப்பி செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் விஷால், கடன் தொகையை செலுத்தாமல் 'வீரமே வாகை சூடவா' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்கு தடை விதிக்க கோரியும் உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக பல முறை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில் நீதிமன்றம் விஷாலுக்கு சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய 2 வாரம் அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் அடுத்த கட்ட விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதி (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இன்னும் தாக்கல் செய்யவில்லை என லைகா தரப்பில் புகார் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரவுள்ளதால் இந்த மனு மீதான விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லைகா தரப்பு, தனி நீதிபதி, உத்தரவுக்கு தடை விதிக்காததால் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பின்னர் விசாரிப்பதாக கூறினார். மேலும் மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வருகிற அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.