விஷால் நடிப்பில் வெளியான ‘இரும்புத்திரை’ படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இப்படத்தை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரி மூலம் தயாரித்திருந்தார். இந்த நிலையில், இப்பட ஷூட்டிங் சமயத்தில் நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியிடம் கடன் வாங்கியுள்ளார். அந்தக் கடனுக்காக தனது வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட சில உறுதிமொழி பத்திரங்களை ஆவணங்களாக அளித்து கடன் தொகையைப் பெற்றுள்ளார்.
இதையடுத்து, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய பிறகும் தன் பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களைத் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி திருப்பித் தராமல் இழுத்தடிப்பதாகவும், தன் ஆவணங்களை வைத்துக்கொண்டு அவர் மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி மீது தியாகராய நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
"‘இரும்புத்திரை’ படத்துக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகும் தயாரிப்பாளர் திரு. ஆர்.பி. செளத்ரி என் காசோலைகள், பத்திரங்கள் மற்றும் உறுதிமொழி ஆவணங்களை திருப்பித் தரத் தவறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவரை ஏதேதோ சாக்கு போக்கு சொல்லிக்கொண்டிருந்த அவர், கடைசியாக ஆவணங்களை காணவில்லை என கூறினார். இதனால் அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம்" என கூறியுள்ளார்.