Skip to main content

கரோனா பாதிப்பு குறித்து விஷால் வெளியிட்ட வீடியோ! 

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
vishal 1

 

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்தியாவில் பல மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. முதலில் சென்னையில் மட்டும் அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை, தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அதிகரிக்கிறது. 

 

இதனிடையே ஜூலை 25ஆம் தேதி நடிகர் விஷாலுக்கும், அவரது தந்தை ஜி.கே. ரெட்டிக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது 20 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு, ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டு முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. 

 

தற்போது கரோனா வைரஸில் இருந்து குணமடைந்த பின்னர், விஷால் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “ஒரு கெட்ட நேரத்தில் இக்கட்டான சூழலில் எப்படி மீண்டு வந்தோம் என்று மற்றவர்களுக்கு சொல்வதில் எந்த வகையிலும் தவறில்லை. என் தந்தைக்கு முதலில் கரோனா தொற்று உறுதியானது. நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. நான் எந்தவொரு மருத்துவமனைக்கும் எதிரானவன் அல்ல, ஆகையால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

 

வீட்டிலேயே அப்பாவைக் கவனித்துக்கொண்டேன். அப்பாவைக் கவனித்து கொள்ளும்போது, எனக்கும் கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அதிகமான காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. நான் யாரிடமும் இதை சொல்லவில்லை. நான் ஆயுர்வேத மாத்திரைகளை எடுத்துக்கொண்டேன். என்னுடைய மேலாளர் ஹரிக்கும் கரோனா அறிகுறிகள் தெரிய தொடங்கின.

 

ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டோம். அதன்மூலம் 4 நாட்களில் காய்ச்சல் குறையத் தொடங்கியது. 7 நாட்களில் முழுமையாக குணமாகிவிட்டோம். ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணமானேன். இதை ஆயுர்வேத மருந்துகள் விற்க வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. எங்களை என்ன விஷயம் காப்பாற்றியது என்று சொல்வதற்காகவே இந்த விஷயத்தை பதிவு செய்கிறேன். மருத்துவர் ஹரிக்கு எனது நன்றி.

 

மருத்துவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன். கரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது வந்துவிடுமோ என்று முதலில் பயப்படாதீர்கள். அதுதான் முதல் மாத்திரை. இந்த பயம் மட்டுமே பாதிப்பேரை இக்கட்டான சூழலில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. கரோனாவுக்கு முக்கியமான மருந்தே பயப்படாமல் இருப்பதுதான், முதலில் பயப்படாதீர்கள். கண்டிப்பாக கரோனா வைரஸை எதிர்ப்பேன் என்று மன தைரியம் இருக்க வேண்டும். அந்த மன தைரியத்துடன் மருந்துகள் எடுத்து கொண்டால், கண்டிப்பாக குணமாகலாம்.

 

அப்படித்தான் 82 வயது நிரம்பிய என் தந்தை குணமானார். அவருடைய மன உறுதியினால் மட்டுமே எனக்கு வந்த தொற்றையும் மன உறுதியுடன் எதிர்கொண்டேன். என் தந்தை, நான், மேலாளர் ஹரி மூவருமே கரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு குணமடைந்தோம்.

 

எங்களால் யாருக்குமே பாதிப்பு இல்லாமல், இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டோம். இந்த வீடியோ எந்தவொரு மருத்துவருக்கோ, மருத்துவத்துக்காகவோ பகிரவில்லை. யாருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவும் இந்த வீடியோவை வெளியிடவில்லை. இன்னொரு மனிதனுக்கு மனிதனாக சொல்ல வேண்டிய கட்டாயத்தில் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்