Skip to main content

சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் காட்டிய வில்லத்தனம்! - இமேஜ்! நோ டேமேஜ்!

Published on 22/07/2018 | Edited on 23/07/2018

ரசிகர்களுக்குப் பரிச்சயம் இல்லாத முகம்! அந்த இளம் நடிகரின் பெயர் விக்கி. அவர் நடித்திருக்கும் படத்தின் பெயர் 'போத'. இதில் அவருக்கு ஒரு மாதிரியான கேரக்டர். அதாவது, ஆண் பாலியல் தொழிலாளியாக வருகிறார். திரைஉலகில் அவர் இப்போது பேசப்படும் நிலையில், ‘இந்த கேரக்டரில் நடித்தால் எதிர்காலம் என்னாவது? இமேஜ் போய்விடுமே’ என்ற சிந்தனைக்கே இடம் கொடுக்காமல், பின்னாளில் பெரிய நடிகர்கள் ஆனவர்கள், அந்தக் காலத்தில் ‘அப்படி-இப்படி’ நடித்தது, மனத்திரையில் விரிகிறது. 


திரும்பிப் பார்க்க வைத்த தீயவன்!

 

sivaji



1953-ல் வெளிவந்தது 'திரும்பிப்பார்'. டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில், கலைஞர் கதை, திரைக்கதை எழுதிய இந்தத் திரைப்படத்தில் சிவாஜி ஏற்றிருந்த கதாபாத்திரத்தின் பெயர் பரந்தாமன். 1952-ல் வெளியாகி, பெரும் வெற்றிகண்ட பராசக்தியின் மூலம், பெரிய அளவில் வரவேற்பு பெற்றிருந்தும், தன் 5-வது படமான 'திரும்பிப்பார்' திரைப்படத்தில், மோசமான வில்லனாக நடித்தார் சிவாஜி. வயோதிகர் ஒருவரின் வாய் பேசமுடியாத மனைவியை, நள்ளிரவில் தந்திரமாக வீடு புகுந்து பலாத்காரம் செய்வார். மில் முதலாளியிடம் கையூட்டு பெற்று, தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பார். உடன்பிறந்த தம்பி சிவாஜி பெண் பித்துப்பிடித்து அலைவது கண்டு ஆவேசமான அவருடைய அக்கா பண்டரிபாய், க்ளைமாக்ஸில் “உனக்கு ஒரு பெண்தானே வேண்டும்! இதோ நான் இருக்கிறேன்!” என்று தயாராவார். “தீயவனே! திரும்பிப்பார்!” என்று குமுறித் தீர்ப்பார். சிவாஜியின் 12-வது படம் 'அந்த நாள்'. தேசத்துரோகி கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார். மனைவியின் கையாலேயே சுடப்பட்டு இறந்துபோவார். துளிவிஷம், எம்.ஜி.ஆரோடு இணைந்து நடித்த கூண்டுக்கிளி, நானே ராஜா, ரங்கோன் ராதா என மேலும் சில படங்களில், தயக்கமில்லாமல் எதிர்மறை நாயகனாக நடித்தார்.

 

thirumbipar






பால்வினை நோயைத் தேடிக்கொண்டவன்!
 

kamal



1973-ல் கே.பாலசந்தர் இயக்கத்தில் சிவகுமார் கதாநாயகனாக நடித்த திரைப்படம் 'சொல்லத்தான் நினைக்கிறேன்'. இதில் கமலுக்கு உமனைசர் கேரக்டர். லிஸ்ட் போட்டு பெண்களை அனுபவிக்கும் கவர்ச்சி வில்லனாக வருவார். வயோதிகர் ஒருவரின் மனைவியை தள்ளிக்கொண்டு போக திட்டமிடுவார். ஜெயசித்ரா இடையில் புகுந்து தன் சகோதரியின் வாழ்க்கைக்காக, கமல் நடத்தும் பேரத்துக்குப் பணிந்து படுக்கையைப் பகிர்ந்துகொள்வார். 1976-ல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளிவந்த 'உணர்ச்சிகள்' திரைப்படத்தில், விதவைப் பெண்ணான எல்.காஞ்சனா தொடங்கி, விலைமாதுக்கள் பலரிடமும் உறவு வைத்து, பால்வினை நோய்கண்டு, நிற்கக் கூட முடியாமல் துடிப்பார். தம்பியாக பாவித்து கமலிடம் அக்கறை காட்டிவரும் ஸ்ரீவித்யா “என் உடம்பை விற்று சம்பாதித்த பணத்தில் உன் உடம்பைக் கெடுத்துட்டு வந்துட்டியேடா” என்று அழுவார். இறுதியில் நோய் முற்றி, மருத்துவமனையின் வி.டி. வார்டில் இறந்தே போவார். 


நண்பன் சாவதை ரசித்த வில்லன் மூஞ்சி!

 

3 mudichu



கே.பாலசந்தரின் இயக்கத்தில் 1976-ல் வெளிவந்த 'மூன்று முடிச்சு' திரைப்படத்தில் ‘சரியான வில்லன் மூஞ்சி’ என்று முகத்துக்கு நேராகவே ரஜினியை திட்டுவார் ஸ்ரீதேவி. வீட்டு வேலை பார்க்கும் அப்பாவிப் பெண்ணைத் தன் வலையில் வீழ்த்தி கர்ப்பமாக்கிவிடுவார் ரஜினி. நண்பன் கமலின் காதலியான ஸ்ரீதேவியை அடைவதற்கு துடிப்பார். இந்த கெட்ட குணத்தாலேயே, கமல் ஏரியில் தவறிவிழுந்து தவிக்கும்போது, காப்பாற்றாமல் அவர் சாவதை வேடிக்கை பார்ப்பார். பின்னாளில், தன் தந்தையை மணந்து, தனக்கு சிற்றன்னையாகிவிடும் ஸ்ரீதேவியிடம் “பேசாம இருடி” என்று கோபம் காட்டுவார். “தாய் ஸ்தானத்துல இருக்கிறவளைப் பத்தி அப்பாகிட்ட எந்த பிள்ளை தப்பா பேசுவான்?” என்று ரஜினியின் மோசமான நடவடிக்கை அறிந்து பேசுவார் ஸ்ரீதேவி. 'மூன்று முடிச்சு' மட்டுமல்ல, முதலில் வெளிவந்த அபூர்வராகங்கள் தொடங்கி, அவர்கள், 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், காயத்ரி, மாங்குடி மைனர் வரை ரஜினி ஏற்று நடித்ததெல்லாம் வில்லன் வேடங்களே! 


உடல் விருந்து பிளாக்-மெயிலர்!

 

vijaykanth



கேப்டனும் கூட வில்லனாகத்தான் அறிமுகம் ஆனார். 1979-ல் எம்.ஏ.காஜா டைரக்‌ஷனில் வெளிவந்த 'இனிக்கும் இளமை' திரைப்படத்தில் சுதாகரும் ராதிகாவும்தான் ஹீரோ-ஹீரோயின். விஜயகாந்தை கராத்தே வீரராகக் காட்டுவார்கள். ஆண்களைப் பார்த்தாலே சபலப்படும் பாத்திரத்தில் மீரா நடித்திருப்பார். அவருடைய அழைப்பை ஏற்று, உடல் விருந்து அளிப்பார் விஜயகாந்த். அந்த நேரத்தில் ரகசியமாகப் படம் பிடித்து, போட்டோவை ரூ.25000-க்கு விற்றுவிடுவேன் என்று பிளாக்-மெயில் செய்வார். 'போத' ஹீரோ விக்கி இப்போது ஏற்று நடித்து, ‘உவ்வே’ என்று குமட்டலான ஒரு விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கும் கதாபாத்திரத்தில், 39 வருடங்களுக்கு முன்பே துணிச்சலாக நடித்தவர் விஜயகாந்த்.



கெட்ட பெயர் வாங்கிய நல்லவர்!

 

nambiyar



ஆன்மிகவாதி, மிகமிக நல்லவர் என்று திரைஉலகில் பெயர் எடுத்தவர் ‘நம்பியார் சாமி’ என்றழைக்கப்படும் எம்.என்.நம்பியார். எம்.ஜி.ஆருடன் மோதும் வில்லன் பாத்திரங்களிலேயே தொடர்ந்து அவர் நடித்து வந்ததால், தமிழகத்தில் பெண்களில் பெரும்பாலானோர், நம்பியார் முகத்தை திரையில் பார்த்ததுமே கரித்துக் கொட்டுவார்கள். அந்தக் காலத்தில், சினிமாவை நிஜம் என்று நம்பியவர்கள் அனேகர் உண்டு. அதனாலேயே, பல நடிகர்களும் ‘மக்களிடையே தங்களின் இமேஜ் கெட்டுவிடக் கூடாது’ என்பதில் கவனமாக இருந்தார்கள். 

 

 


வெள்ளித்திரையில் சாதித்த சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற ஹீரோக்கள், விதிவிலக்காக வில்லனாகவும் நடித்திருக்கின்றனர். ஹீரோவா? வில்லனா? எந்த வேடமாக இருந்தால் என்ன? ரசிகர்களை, குறிப்பாக பெண்களை எரிச்சலூட்டும் கதாபாத்திரமாக இருந்தாலும், அதையும் ஒரு சவாலாக ஏற்று நடித்து, அவரவர் பாணியில் முத்திரை பதித்திருக்கிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்