தங்கலான் படத்திற்கு பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கி வரும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது. அதைத் தொடர்ந்து விக்ரம் பிறந்தநாளை(17.04.2024) முன்னிட்டு முதல் பார்வை மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரில் தொடக்கத்தில் விக்ரம் மற்றும் துஷாரா விஜயன் இடையேயான காதல் காட்சிகள் வருகிறது. பின்பு போலீஸாக வரும் எஸ்.ஜே. சூர்யா படத்தில் காட்டப்படும் திருவிழாவைக் கண்காணித்து வருகிறார். அதே திருவிழாவில் தலையில் துண்டுடன் விக்ரம் மறைந்து இருப்பது போல் காட்டப்படுகிறது.
அதன் பின்பு விக்ரம் நெத்தியில் ஒருவர் துப்பாக்கியை பாயிண்ட் செய்துள்ளார். அவரைப் பார்த்து விக்ரம், “வேணாம் டா பேசாமா போய்ரு அதான் உனக்கு நல்லது” என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து சண்டைக் காட்சிகளுடன் நகர்ந்து, விக்ரம் உருண்டையை(வெடி குண்டு) பற்ற வைத்து தூக்கிப் போடுவதுபோல் இடம்பெற்றுள்ளது. இறுதியாக துப்பாக்கியைச் சுழற்றி அரிவாளைப் பிடித்து வேட்டியை மடித்துக் கட்டி சண்டைக்கு ரெடியாவதுபோல் முடிவடைகிறது.