சாய் பல்லவி, கடைசியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தில் நடித்திருந்தார். உண்மை சம்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்தில் நடந்து முடிந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், இப்படத்திற்காக சாய் பல்லவி சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
இதனையடுத்து இவர் சந்தூ மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யாவுடன் 'தண்டேல்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த மாதம் பிப்ரவரி 07 அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ‘ராமாயணம்’ படத்திலும் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளிக்கும் இரண்டாவது பாகம் 2027ஆம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சாய்பல்லவி கடந்த சில நாட்களுக்கு முன் வாரணாசி சென்று அங்கு ‘அன்னப்பூர்ணா தேவி’ கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிரது. ஏற்கனவே சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கறி உணவு உண்ணாமல் சைவம் உணவு சாப்பிட்டு விரதம் இருப்பதாக வெளியான செய்திக்கு சாய்பல்லவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.