விஜய் சேதுபதி - த்ரிஷா நடித்த '96' திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. பார்ப்பவர்களின் பழைய காதலை, நினைவுகளை தூண்டி நெகிழ வைக்கும் இந்தப் படம், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால், படம் வெளியாவதற்கு முந்தைய நாளான கடந்த வியாழன் கிழமை அன்று, வெளியீட்டில் திடீர் பிரச்சனை ஏற்பட்டது. இந்தப் படத்தை தயாரித்த நந்தகுமார், ஏற்கனவே தயாரித்த 'கத்திச்சண்ட' போன்ற படங்களின் தோல்வி காரணமாக சில ஃபைனான்சியர்களுக்கு பணம் தர வேண்டியிருந்ததால் படத்தை வெளியிட தடையாக இருந்தனர். இதனால், வியாழன் அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக்காட்சி தள்ளிப் போனது. நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷாலுக்கும் இந்தத் தயாரிப்பாளர் பணம் தர வேண்டியிருந்ததாகவும் அதனால் அவரும் தடையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியில் விஜய் சேதுபதி தலையிட்டு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு படவெளியீட்டுக்கு துணை புரிந்துள்ளார். விஜய் சேதுபதி தலையீட்டால் விஷாலும் இறங்கி வந்து விட்டுக்கொடுத்ததாக விஜய் சேதுபதியே கூறினார். இப்படி வெளியான இந்தப் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் இந்தப் பிரச்சனை குறித்து விஜய் சேதுபதி பேசியது...
"விஷால் நல்ல மனுஷன். முன்னாடி தெரியறவங்க மேலதான் தவறுன்னு நாம நினைக்கிறோம். அப்படியில்ல. எனக்கு அவர் மேல வருத்தமில்லை. அவர் எவ்வளவு பணத்தை இதுவரை விட்டுக்கொடுத்துருக்காரோ? இப்போ கூட அவர்தான் பணத்தை வேணாம்னு சொல்லியிருக்கார். அது அவரோட நல்ல மனசு.
உங்களுக்கு வெளியே தெரிஞ்சது கம்மிதான். அன்னைக்கு நைட் நான் அங்கதான் இருந்தேன். இதுவரைக்கும் நான் செஸ் விளையாடிதான் பாத்திருக்கேன். அன்னைக்குதான் நான் செஸ் காயின் ஆனேன். என்னை நகர்த்துறதை நான் உணர்ந்தேன். செஸ் போர்டுல நீங்க காயினா மாறி, நகர்த்தப்படும்போதுதான் அந்த அனுபவம் தெரியும். இது சீமராஜா படத்தப்போ சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது. அதுக்கு முன்னாடி விமலுக்கு நடந்தது.
ஃபைனான்சியர்ஸ் மேலும் முழு தவறில்லை. அவங்களுக்கு பணம்தான் அடையாளம். எங்களுக்கு படம்தான் அடையாளம். என் படம் வெளிவந்து வெற்றி பெற்றாதான் நான் இப்போ உங்ககிட்ட சந்தோஷமா பேசுற மாதிரி பேச முடியும். வெளியில படம் ஹிட், கூட்டம் அலைமோதுதுன்னு சொல்றாங்க. ஆனா, தயாரிப்பாளர்களுக்கு அந்தக் கணக்கே வருவதில்லை. இங்க வியாபாரம் ஒருத்தர்கிட்ட இல்ல.
நான் நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கு நூறு பவுன் செஞ்ச போது எங்க அம்மா கவலைப்பட்டாங்க, 'இவனும் இவுங்க அப்பன் மாதிரி ஊருக்கு கொடுத்து அழிஞ்சுருவானோ'னு. ஆனா, அங்க என் அம்மாவையும் கூட்டிட்டுப் போய் உட்கார வைத்தேன். அப்போ அவங்க சந்தோஷப்பட்டாங்க. இங்க எல்லாத்தையும் ஓப்பனா பேச முடியாது, நிறைய பிரச்சனைகள் இருக்கு. தீர்வில்லாத பிரச்சனைகளை வெளியே சொல்லி என்ன பண்ணுறது?"