54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நேற்று (20.11.2023) பிரம்மாண்டமாகத் தொடங்கியது. தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதோடு பிலிம் பஜாரையும் அமைச்சர் திறந்து வைத்தார். இதனிடையே மத்திய இணை அமைச்சர் எல். முருகன், நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்திற்கு சினிமாவின் சிறந்த பங்களிப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. நவம்பர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 270க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. இந்தியன் பனோரமா பிரிவில் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய 'காதல் என்பது பொதுவுடைமை', சம்யுக்தா விஜயன் இயக்கிய 'நீல நிற சூரியன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன. சத்யஜித்ரே பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த ஆண்டு ஹாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான மைக்கேல் டக்ளஸிற்கு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் சேதுபதி நடித்த மவுன படமான ‘காந்தி டாக்ஸ்’ திரையிடப்பட்டது. கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கியுள்ள இப்படத்தில் அதிதி ராவ், அரவிந்த சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவா சென்றுள்ளார் விஜய் சேதுபதி. பின்பு நிகழ்ச்சி அரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி, “என்னுடைய இரண்டு படங்கள் இதில் திரையிடப்படுகின்றன. விடுதலை மற்றும் காந்தி டாக்ஸ். ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. மற்ற படங்களையும் பார்க்க ஆவலாக வந்துள்ளேன்.
சினிமா என்பது அழகான மொழி. அது பார்வையாளர்களை வேறொரு உலகத்திற்கு மாற்றுகிறது. புதிய கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துகிறது. உணர்ச்சிகளை பிரதிபலிக்கிறது. மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்றும் சொல்கிறது. பார்வையாளர்களும் புது அனுபவத்தைப் பெறுகிறார்கள். எனவே இது ஒரு அற்புதமான ஊடகம். இந்த துறையின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் உணர்கிறேன், குறிப்பாக ஒரு நடிகராக. அதனால் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வருகிறேன்” என்றார்.