மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான 'தலைவி' படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்கள் எழுந்த நிலையில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா தேர்வானது எப்படி என்று இயக்குனர் விஜய் பேசியபோது...
"ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு தேசிய தலைவர். இந்தியா முழுவதும் இந்தப் படத்தைக் கொண்டுசெல்ல முடிவு எடுத்துள்ளோம். தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக கங்கனா உள்ளார். முன்னணி நாயகி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றால் சரியாக இருக்கும் என்பதால் அவரை படக்குழுவுக்குள் கொண்டுவந்தோம். இந்தக் கதை இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களால் ரசிக்கப்படும். கங்கனாவைத் தேர்வு செய்வதற்கு முன் யாரை நடிக்க வைப்பது என பல விவாதங்களை நடத்தினோம். இந்தக் கதாபாத்திரத்துக்காகப் பலரைச் சந்தித்தோம். கங்கனா மிகவும் ஆர்வத்துடன் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆயத்தமானார். படத்துக்காக தமிழ் கற்று வருகிறார். இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதற்காக அவருக்கு ஒரு மாதம் பயிற்சி பட்டறை நடத்தவுள்ளோம்" என்றார்.