விஜய் தேவரகொண்டா, சமந்தா நடிப்பில் சிவ நிர்வாணா இயக்கத்தில் கடந்த 1 ஆம் தேதி வெளியான படம் 'குஷி'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார். பான் இந்தியா படமாகத் திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு தெரிவித்திருந்தது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ. 7 கோடிக்கு மேலாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை படக்குழுவினர் அண்மையில் நடத்தினர். அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, "ரூ.1 லட்சம் வீதம் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு காசோலையாக வழங்கவுள்ளேன். நான் கொடுக்கும் பணம் மூலம் உங்களது வாடகை, கட்டணம் ஆகியவற்றிற்கு செலுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்றார். அவரது சம்பளத்தில் ஏழை எளிய மக்களுக்கு 1 கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' படத்தின் விநியோக நிறுவனமான அபிஷேக் பிக்சர்ஸ், அவருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டியர் விஜய் தேவரகொண்டா. வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் படம் விநியோகம் செய்ததில் நாங்கள் ரூ. 8 கோடிகளை இழந்துள்ளோம். ஆனால் அதற்கு யாரும் பதிலளிக்கவில்லை.
இப்போது நீங்கள் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளீர்கள். தயவுசெய்து எங்களையும் எங்கள் விநியோகஸ்தர்கள் குடும்பங்களையும் காப்பாற்றுங்கள் என்ற நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனப் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதைக் கேட்டு விஜய் தேவரகொண்டா அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.