அர்ஜுன் ரெட்டி... தமிழ் இளைஞர்கள் வட்டாரத்தில் பிரபலமான பெயர். கிட்டத்தட்ட எல்லா தமிழ் இளைஞர்களும் பார்த்திருக்கும் தெலுங்கு படம்.
இந்தப் படத்தின் மூலம்தான் விஜய் தேவரகொண்டா தமிழகத்துக்கு அறிமுகம். கட்டுக்கடங்காத தலைமுடி, சுதந்திரத்தை வெளிப்படுத்தும் தாடி என கரடு முரடு ஹீரோவாக கவர்ந்தவர் விஜய். அந்தப் படத்தில் அவரது ஸ்டைல், ராயல் என்ஃபீல்டு பைக், உடை, கூலர்ஸ் என அனைத்தும் தெலுங்கு தேசத்தைத் தாண்டி தென்னிந்தியா முழுவதுமுள்ள இளைஞர்களின் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் ஆனது. இதற்கு முன் 'ப்ரேமம்' படத்தின் மூலமாக நிவின் பாலிக்கு அந்தப் புகழ் கிடைத்தாலும் அவரது அடுத்தடுத்த படங்கள் வேறு திசையில் சென்றுவிட்டன.
5 மணி காட்சி
அர்ஜுன் ரெட்டி மயக்கம் தெளியும் முன்பே வந்தது 'கீதா கோவிந்தம்'. ரக்கட் (rugged) டாக்டராக இருந்து ஹேண்ட்ஸம் ப்ரொஃபசர் ஆனார் விஜய். 'மேடம், மேடம்' என்று அவர் கெஞ்சியதில் தமிழக இளம் பெண்களும் மனதிறங்கிவிட்டனர். நேரடி தெலுங்கு படமான 'கீதா கோவிந்தம்' சென்னையில் பல வாரங்கள் பலத்த போட்டிகளைத் தாண்டி ஓடியது மிகப்பெரிய வெற்றி. சென்னையைத் தாண்டி பல ஊர்களிலும் திரையரங்குகளில் வெளியானது அதை விட பெரிய வெற்றி. சோஷியல் மீடியாவில் வெளிப்பட்டு வந்த விஜய் தேவரகொண்டா ரசிகைகள், இன்று காலை சென்னை ரோகிணி திரையரங்கில் நடந்த அதிகாலை 5 மணி காட்சியில் கூடியது பெரிய ஆச்சரியம். கீதா கோவிந்தம் படத்துக்கு காலை 8 மணி காட்சி திரையிடப்பட்டதே பெரிய விஷயமாகப் பேசப்பட்டது.
'இன்கேம் இன்கேம்' என்ற அந்த ஒரு பாடலும் அதில் நடித்த விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடியும் போதுமானதாக இருந்தது அந்தப் படத்திற்குக் கூட்டத்தை இழுக்க. அந்தப் படத்தின் வெற்றி இப்போது நேரடியாக விஜய் நடிக்கும் முதல் தமிழ் படமான 'நோட்டா'வுக்கு காலை 5 மணி காட்சியை பெற்றுத் தந்துள்ளது. ஆரம்பத்தில் ரஜினி, கமல், அஜித், விஜய் நால்வருக்கு மட்டுமே இந்த அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டன. பின்னர் சூர்யா, சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு இது வாய்த்தது. அவர்கள் அனைவருக்கும் பல படங்கள் வெற்றி பெற்ற பின் கிடைத்த இந்த வாய்ப்பு, விஜய் தேவரகொண்டாவுக்கு முதல் நேரடி தமிழ் படத்திலேயே கிடைத்துள்ளது. அவர் அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி வளர்க்கிறார். சென்னையில் நடந்த 5 மணி காட்சிக்கு வந்து ரசிகர்களுடன் படம் பார்த்தார் விஜய் தேவரகொண்டா. படத்தின் பிரமோஷனுக்காக பல விதங்களில் நேர்காணல்கள் கொடுத்தார்.
நோட்டா
இவை படத்துக்கு வெளியே என்றால் 'நோட்டா' படத்தில் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் தங்கி கொண்டாட்டமாக இருந்ததில் இருந்து, சென்னை வெள்ளத்தின் போது அரசு நடந்து கொண்ட விதம் வரை தமிழக அரசை நேரடியாக கிண்டல் செய்யும் வகையில் பல காட்சிகளை வைத்து களத்தில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் மாநில அரசியல்வாதிகளை நேரடியாக பலமாக விமர்சித்த படம் 'ஜோக்கர்' என்றே சொல்லலாம். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களில் மாநில அரசை நேரடியாக விமர்சிக்கும், கிண்டல் செய்யும் தன்மை குறைவு. 'மெர்சல்' படத்தில் விஜய் அரசியல் பேசியிருந்தாலும் அது மேலோட்டமானதாக, பொதுவானதாக இருந்தது. அந்த வகையில், விஜய் தேவரகொண்டா கொஞ்சம் தைரியமாகத்தான் செய்துள்ளார். தன் பேட்டிகளிலும் அதிமுக அமைச்சர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கும் மரியாதைகளை கிண்டல் செய்து பேசியுள்ளார் விஜய். இப்படி, படத்தின் உள்ளடக்கத்திலும் படத்துக்கு கிடைத்த ஓப்பனிங்கிலும் விஜய் தேவரகொண்டாவின் என்ட்ரி அதிரடியாகத்தான் அமைந்துள்ளது.