நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் சமீபத்தில் கட்சிக்கான கொடியை அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலை அறிமுகப்படுத்திய அவர், கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாக தெரிவித்தார்.
த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் நடைபெற திட்டமிட்டுள்ளனர். இதற்காக காவல் துறையிடம் அனுமதியும் கேட்டு பெறப்பட்டுள்ளது. செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு த.வெ.க. சார்பில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மாநாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே தேர்தல் ஆணையம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்து அங்கீகரித்துள்ளது. இம்மாநாட்டில் அ.தி.மு.க.-வின் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்வதாகவும் மேலும் அவர்கள் த.வெ.க.வில் இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இதில் கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முக்கிய மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் மாநாடு ஏற்பாடு குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்த விஜய், மாநாட்டை இந்த மாதமே நடத்தியாக வேண்டும் என பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் காவல்துறை விதித்த 33 விதிகள் படி மாநாட்டு பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என விஜய் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.