சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைத்த போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிராக சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவணத் திரைப்படப் போட்டி (Drive against Drugs) நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பலரின் குறும்படங்கள் பங்கேற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்றது. விக்னேஷ் சிவன் தலைமையில் ஒரு குழு வெற்றியாளர்களைத் தேர்வு செய்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்துகொண்டு பேசினர். மேலும் உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது விக்னேஷ் சிவன் பேசுகையில், "எனக்கும் காவலதிகாரியாக வர வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் என் ஆர்வம் வேறுபக்கம் திரும்பியது. இருந்தாலும் காவல்துறைக்கு என்னால் என்ன முடியுமோ அதை செய்ய நினைத்துள்ளேன். சட்ட ஒழுங்கை கடைப்பிடித்து வருகிறேன். எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எல்லோரும் அதே போல் தனிமனித ஒழுக்கத்தை பாதுகாத்தால் நல்லது. போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பற்றி பேசும்போது நிறைய யோசனைகள வந்தது. நிகழ்ச்சிக்கு 300க்கும் மேற்பட்ட குறும்படங்கள் வந்தது. அனைத்துமே நன்றாக இருந்தது. முக்கியமாக 'அன்பு' என்ற தலைப்பில் வந்த படத்தை 11 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் எடுத்துள்ளார். அது பெருமைப்படும் விஷயமாக இருந்தது" என்றார்.