தன்னுடைய திரையுலக அனுபவங்களை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
வாலி சாரின் பாடல்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் இருக்கும். கடைசிவரை தன்னை அப்டேட்டாக வைத்திருந்தவர் வாலி சார். நாமும் அவுட்டேட்டாக ஆகிவிடக் கூடாது என்கிற பயத்தை எனக்கு ஏற்படுத்திக்கொண்டே இருப்பவர் அவர். மிஸ்ஸி சிப்பி பாடலை வாலி சார் எழுதியது ஆச்சரியம். யாரும் முகம் சுளிக்காத வகையில் கிளாமரான அந்தப் பாடலை அவர் எழுதியிருப்பார். எனக்கு அவர் எழுதியதில் மிகவும் பிடித்த இன்னொரு பாடல் முக்காலா முக்காபுலா. எப்படி அதுபோன்ற வார்த்தைகளைப் பிடிக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கும்.
முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். என்னோடு படித்த பெண்கள் கூட அவற்றைத் திரும்பிப் பார்க்கவில்லை. என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய ஆல்பம் பாட்டுக்காக என்னைப் பாடல் எழுதச் சொன்னார். அதுதான் நான் எழுதிய முதல் பாடல். அவருக்கு நான் எப்போதும் நன்றி சொல்ல வேண்டும். அதன்பிறகு பலருடன் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தேன். கண்ணை வீசி பாடலில் நான் நினைத்த வரிகளை விட எதிர்பார்க்காத வரிகளுக்கு அதிக பாராட்டுகள் கிடைத்தது. நான் அதிகம் எதிர்பார்த்த சில பாடல்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
அடிபொலி பாடல் எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்தது. கண்ணை நம்பாதே படத்துக்குப் பாடல் எழுதும்போது அது உதயநிதி ஸ்டாலின் சார் நடித்த படம் என்பதே எனக்குத் தெரியாது. அதனால் பொதுவான ஒரு பாடலாகத் தான் அதை எழுதினேன். அதன் பிறகு உதயநிதி சாரின் படத்துக்காகத் தான் அந்தப் பாடல் என்று தெரிந்தவுடன் சர்ப்ரைஸாக இருந்தது. தமிழ் இலக்கியங்களில் நாம் இன்னும் சினிமாவில் பயன்படுத்தாத வார்த்தைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைத் தேடித் தேடிப் பயன்படுத்துகிறேன். அது புதுமையையும் தருகிறது.