இந்திய சினிமாவில் பல பயோபிக்கள் வெலியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்கள் வாழ்க்கை கதைகள் தற்போது படங்களாக வருகின்றன. ஆந்திர மாநில முன்னாள் முதல்வர்கள் என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர் ஆகியோரின் வாழ்க்கையை படங்களாக எடுத்து வெளியிட்டனர். இதேபோல முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்க்கையும் படமாக வெளிவந்தது. பால்தாக்கரே வாழ்க்கை படமும் வெளியானது.
தமிழ் சினிமாவில் தற்போது மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் வாழ்க்கை வரலாறும் படங்களாக உருவாக்கி வருகின்றனர். இந்த வரிசையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வாழ்க்கையும் சினிமா படமாக எடுக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில் மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையையும் படமாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. சாகரிகா கோஷ் எழுதிய இந்திரா காந்தி வாழ்க்கை புத்தகத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இந்திராகாந்தி வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார்.
“இந்திராகாந்தி வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. அது இப்போது நனவாக போகிறது. இந்திராகாந்தி வாழ்க்கை கதையில் இந்திராவாக நான் நடிக்க இருக்கிறேன். கணிதமேதை சகுந்தலா தேவி வாழ்க்கையும் படமாகிறது. அதில் சகுந்தலா தேவியாக நடிக்கிறேன்.சமூக பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை” என்று இப்படத்தில் நடிப்பது குறித்து வித்யா பாலன் கூறியுள்ளார்.