
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மே 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் த.செ.ஞானவேலும் கலந்து கொண்டார். அவ்ர் பேசிய சில விஷயங்கள் தற்ஓது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர் பேசியதாவது, “இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டேன் கண்டிப்பாக இப்படம் வெற்றி பெறும். ஒரு போர் பத்தி, அது ஏற்படுத்துகின்ற விளைவுகள் பத்தி, ஒரு குண்டு சத்தம் இல்லாமல் அது சம்பந்தமான ஒரு அழுகாட்சி இல்லாமல், மிக ஆழமாகப் போரின் வலியை இந்தப் படம் பேசியுள்ளது. இதோட நகைச்சுவை எல்லாரும் பேசுவார்கள். ஆனால் வலியைச் சொன்னால் கூட நமக்கு அது பாதிக்காது, ஆனால் வலியை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே அதெல்லாம் ஒன்னு இல்ல அப்படின்னு சொல்றது இருக்கு இல்லையா அது மிகத் துயரமானது.
அழகான ரசனையான ஒரு நகைச்சுவைக்கு பின்னால் ஒரு போர் என்ன செய்யும் அப்படிங்கிறது தான் இந்த கதை. பெண்கள், குழந்தைகள், விலங்குகள் போன்றவற்றைப் பாதுகாப்பது போன்ற சில விதிகள் போரில் முக்கியம். ஆனால் இப்போது உலகம் கொடூரமாக மாறிவிட்டது, மனிதாபிமானம் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் கொடூரங்களை நாம் தினமும் பார்க்கிறோம். இலங்கையில் போர் எவ்வளவு இரக்கமற்றது என்பதை நாம் அனைவரும் படித்திருக்கிறோம். அது உருவாக்கிய தாக்கம் பேரழிவை ஏற்படுத்துவதால் மக்கள் இன்று வரை துன்பப்படுகிறார்கள். படத்தைப் பார்க்கும்போது நான் பிரமித்துப் போனேன், ஏனென்றால் அது போன்ற ஒரு நாட்டிலிருந்து வரும் ஒரு குடும்பத்தைப் பற்றிய ஒரு மகிழ்ச்சியான திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதற்காகவே இப்படம் வெற்றி பெற வேண்டும்” என்றார்.