
கேரளா ஆலப்புழாவில் கடந்த 1ஆம் தேதி ரூ.2 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் கேரள போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தஸ்லீமா, சுல்தான் மற்றும் ஃபெரோஸ் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் தஸ்லீமா, திரைப்படத் துறையில் உள்ளவர்களுக்கு வினியோகிக்க அந்த போதைப்பொருளை வைத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவரது செல் போனில் நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோரின் அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு தஸ்லீமா, ஏற்கனவே போதைப்பொருள் வழங்கியிருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்தனர்.
இதனை அடுத்து நடிகர்கள் ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக அதிகாரிகளால் நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அதன் படி ஆலப்புழாவில் உள்ள அலுவலகத்தில் நடிகர்கள் இருவரும் நேரில் ஆஜராகினர். இருவரிடமும் பத்து மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்றது. விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்துவதை ஒப்புக்கொண்ட ஷைன் டாம் சாக்கோ அதில் இருந்து விடுபட விரும்புவதாக கூறியுள்ளார். இதனால் இவரை போதைப்பொருள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நடிகரான ஸ்ரீநாத் பாசி வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஷைன் டாம் சாக்கோ படப்பிடிப்பு தளத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக சமீபத்தில் நடிகை ஒருவரால் கொடுத்த புகாரின் அடிப்படையில் கேரளா மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு அதிரடிப் படையினர் முன்பு விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்தார். இதற்கு முன்பாகவே இவர் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்து பின்பு விடுவிக்கப்பட்டார். இப்படி தொடர்ந்து அவர் மேல் போதைப்பொருள் குற்றச்சாட்டு அதிகரித்து வந்ததால் கேரள திரைப்பட ஊழியர் கூட்டமைப்பு(FEFKA) அவர் இனிமேல் இப்படி நடக்கக்கூடாது என்றும் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என்றும் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது. மேலும் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அவர் விடுபட சரியான ஆலோசகர்கள் தேவை எனவும் அறிவுறுத்தியது. இதையடுத்து இப்போது இன்னொரு போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி போதைப் பொருளில் இருந்து அவர் விடுபட விரும்பியதால் அவர் போதை மறுவாழ்வு மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் மேலும் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. திரைப்பட இயக்குநர்கள் காலித் ரெஹ்மான் மற்றும் அஷ்ரப் ஹம்சா ஆகியோர் உயர் ரக போதைப்பொருளுடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சிக்கினர். பின்பு இருவரும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் சிக்கிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒளிப்பதிவாளர் சமீர் தாஹீருக்கு சொந்தமானது என்பதால் அவரிடமும் விரைவில் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனர். தொடர்ந்து கேரள திரையுலகினர் போதைப்பொருள் வழக்கில் சிக்கியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.