
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் உருவாகியுள்ள இப்படம் மே 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி இன்று நடைபெற்றது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுந்துள்ளது. காட்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் எமோஷ்னலாக பேசினார். “இந்த நாளுக்காகத்தான் இத்தனை நாள் நாங்கள் காத்துக்கொண்டிருந்தோம். இவ்ளோ ரெஸ்பான்ஸ் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காமெடி சீன், கிளைமாக்ஸ் சீன் என எல்லா சீனுக்குமே நல்ல வரவேற்பு கிடைத்தது” என கண்கலங்கியபடியே சொன்னார்.
பின்பு பேசிய சசிகுமார், “தயாரிப்பாளருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இயக்குநருக்கு 24 வயதுதான். வயதை பார்க்காமல் ஸ்கிரிப்டை பார்த்து படம் தயாரித்துள்ளார்கள். சினிமாவுக்கு வயது முக்கியமில்லை ஸ்கிரிப்ட் தான் முக்கியம் என நிரூபித்துள்ளார்கள். நிச்சயம் தியேட்டரில் மக்கள் பார்த்து இப்படத்திற்கு ஆதரவு கொடுப்பார்கள். எல்லா நாடுகளிலும் இது நடக்கும். ஒரே ஒரு வேண்டுகோள். படத்தின் கடைசி பத்து நிமிடத்தை யாரிடமும் சொல்லாதீர்கள்” எனக் கேட்டுக் கொண்டார்.