தீனா படம் மூலம் 'தல' என பட்டம் பெற்று ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த அஜித் எளிமைக்கும், கடுமையான உழைப்பிற்கும் முன்னுதாரணமாய் திழ்ந்து வருகிறார். தன்னால் எந்த ரசிகரும் தப்பான வழிகாட்டுதலுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதிலும், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது எனபதிலும் மிகுந்த கவனமாக இருக்கும் அவர் 'அசல்' படத்தின்போது தனது 'அல்டிமேட் ஸ்டார்' அஜித் என்ற பட்டத்தை துறந்தார். பிறகு 'மங்காத்தா' படத்தின்போது தன் ரசிகர் மன்றங்களை கலைத்தார்.
அதேபோல் படங்களிலும் தேவை இல்லாத இடங்களில் இடம்பெறும் பன்ச் டைலாக்குகளை வெகுவாக குறைத்து, தன்னை 'தல' என்று அழைப்பதையும் ஊக்குவிப்பதை தவிர்த்து வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் இன்னமும் அவர் மேல் நன்மதிப்பு கூடி ரசிகர்கள் வட்டம் இருப்பதை விட பன்மடங்கு பெருகியுள்ள நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி 'நேர்கொண்ட பார்வை' படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். ஹிந்தி பட உலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் இவர் அஜித் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியபோது... ''பெரிய ரசிகர்கள் கூட்டத்தை தனக்கு பின்னால் வைத்திருக்கும் அஜித் படப்பிடிப்பில் என்னிடம் மட்டுமல்லாமல் எல்லோருடனும் மிகவும் எளிமையாக பழகினார். இந்த கதையை அஜித்குமார் போன்ற பெரிய நடிகரால்தான் எளிதில் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடியும். ஒருமுறை தல இமேஜ் பற்றி அவரிடம் நான் பேசியபோது மிகவும் கூச்சப்பட்டார்'' என்றார்.