பாலிவுட்டில் வருடா வருடம் நிறைய பையோபிக்கள் வந்துகொண்டே இருக்கின்றன. குறிப்பாக கிரிக்கெட் வீரர்களுக்கான பையோபிக்களும் எடுத்து வரப்படுகிறது. தோனி, சச்சின், அசாருதின், தற்போது கபில் தேவ் என்று பையோபிக்கள் நீண்டு கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. தன் பயோபிக் உருவாகவுள்ளது தொடர்பாக முத்தையா முரளிதரன், “விஜய் சேதுபதி போன்ற ஒரு திறமையான நடிகர் என் கதாபாத்திரத்தில் நடிப்பதில் எனக்கு பெருமை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டில் முத்திரை பதித்த முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும்” என்றார்.
முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் “முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளது.
முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 800 விக்கெட் எடுத்து பெரிய சாதனை படைத்துள்ளார். அதனால் இப்படத்திற்கு ‘800’ என தலைப்பிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.