Skip to main content

"இதை நிறைய பேர் கேப்பாங்க... சொல்ல கூடாதுன்னு நினைச்சேன்" - ரகசியம் உடைத்த வெற்றிமாறன்

Published on 18/03/2022 | Edited on 23/03/2022

 

vetrimaran talk about selfie movie and mathimaran

 

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதிமாறன் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் செல்ஃபி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க, கெளதம் மேனன், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தமிழகத்தில் பல மாணவர்களின் உயிர்களைக் காவு வாங்கிய நீட் தேர்வு குறித்து பேசப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஜி.வி பிரகாஷ், மதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினருடன், இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். 

 

இவ்விழாவில் பேசிய வெற்றிமாறன், "மதிமாறன் சுய மரியாதையுடன் இருப்பவன். ஒரு குறும்படம் எடுத்து என்னிடம் வந்தான். அதைப் பார்த்து விட்டு அவனை என்னோடு சேர்த்துக் கொண்டேன். ஒரு நல்ல சினிமாவுக்கான எனர்ஜி அவனிடம் இருந்தது. 'ஆடுகளம்' படம் ஷூட்டிங்கில் மதிமாறன் ஜூனியர். ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணியில் அவன் வேலை ரொம்ப பெரியது. 'செல்ஃபி' படத்தின் படப்பிடிப்பை 29 நாட்களில் முடித்து விட்டான். ஆச்சர்யமாக இருந்தது. இந்தப் படம் மூன்று மடங்கு லாபம் வரும் என்று தாணு சார் சொன்னார். ரொம்ப பெருமையாக இருக்கிறது. நான் படம் பார்த்துவிட்டேன். படத்தில் ஒரு ரா எனர்ஜி இருக்கிறது. படத்தில் கேமரா எடிட்டிங் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் கதாபாத்திரத்திற்கு நன்றாக பொருந்தியிருக்கிறார். டிரைலரைவிட படம் சிறப்பாக இருக்கும். மதிமாறனுக்கு நிறைய பாராட்டுகள் வரும், கவனமாக இருக்க வேண்டும்.

 

நமது குறை நிறைகளை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். தாணு சார் இந்தப் படத்தை எடுத்துச் செய்யணும் என்று நினைத்ததுதான் நல்ல விஷயம். தாணு சார் இப்படத்தை சுற்றி ஒரு விஷயத்தைக் கொடுத்திடுவார். அவருக்கு ரொம்ப நன்றி. நான் ஒரு விஷயத்தை சொல்ல கூடாதுன்னு நினைச்சேன். மதிமாறன் எந்த ஒரு இடத்திலும் என் உறவினர் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை. எனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தது மதிமாறனின் அப்பாதான். அவர் என் மாமா. நிறைய பேர் என்கிட்ட கேப்பாங்க உங்களுக்கு எப்படி இந்த பெயர் வந்துச்சி ஒருவேளை நீங்களே வச்சிக்கிட்டிங்களான்னு. நான் வைக்கல என் மாமாவுக்கு மாறன் என்ற பெயர் ரொம்ப புடிக்கும், அதனாலதான் எனக்கு வெற்றிமாறன் என்றும், இவருக்கு மதிமாறன் என்றும், இன்னொரு உறவினருக்கு தமிழ் மாறன் என்றும் வைத்தார். இந்தப் பெயர் வைத்த என் மாமாவுக்கு நன்றி" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்