Skip to main content

“வினோத் செய்திருப்பது சாதாரண விஷயமல்ல” - வெற்றிமாறன் பாராட்டு

Published on 13/08/2024 | Edited on 13/08/2024
vetrimaaran speech in kottukkaali trailer launch

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘கொட்டுக்காளி’, இப்படத்தை கூழாங்கல் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை விருதுகளையும் பெற்றது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ஆம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர்களுடன் வெற்றிமாறன், மிஷ்கின் ஆகிய இயக்குநர்களும் கலந்து கொண்டனர்.
 
அப்போது வெற்றிமாறன் பேசுகையில், “வினோத் ஒரு ஸ்பெஷலான டைரக்டர். இந்த இளம் தலைமுறையில் சர்வதேச அளவில் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறார். மற்ற இயக்குநர்களும் இருக்கிறார்கள். இருந்தாலும் வினோத்தின் இருப்பிடம் வணிகரீதியாகவும் இருக்கிறது. அதற்கு காரணம் சிவகார்த்திகேயனுடைய ஆதரவு, மற்றும் சூரி போன்ற ஒரு பிரபல நடிகர் நடித்திருப்பது. அதே சமயம் சூரி போல ஒரு நடிகர் இந்தப் படத்திற்குள் தானாக வருவது ஒரு பலமாகவும் சவாலாகவும் இருந்திருக்கும். வாழ்க்கைகு மிக நெருக்கமான ஒரு படம் பண்ணும் போது வணிக ரீதியான கலைஞர்களையும் வைத்துக் கொண்டு தனக்கு பிடித்தமான படம் பண்ணுவது மிகப் பெரிய சவால். வினோத் இரண்டு படங்கள் எடுத்திருக்கிறார். இரண்டு படங்களுமே பல சர்வதேச பட விழாக்களில் கொண்டாடப்படக்கூடியதாக இருந்திருக்கிறது.

கொட்டுக்காளியை பொறுத்தவரைக்கும், இது ஒரு பெண் அடிமைத்தனத்துக்கு எதிரான படமா என்று கேட்டால். ஆம் பெண்ணியத்திற்கான படம் தான். அவர்களின் பக்கம் நிற்கிறது. சாதியத்துக்கு எதிரான படமா என்று கேட்டால். ஆம் சாதியத்திற்கு எதிராகப் பேசுகிறது. இலக்கியமா இருக்கிறதென்றால் இலக்கியமாகவும் இருக்கிறது. வணிக சினிமா பார்க்கக்கூடிய பார்வையாளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கிறது. இதைச் சாதிப்பது சாதாரணமான விஷயம் இல்லை. ஆனால் வினோத் ரொம்ப எளிமையாக இயல்பாகச் செய்திருக்கிறார். இதைத் தாண்டி ஒரு விஷயம் வினோத் துணிச்சலாகச் செய்திருப்பது, படத்தில் பின்னணி இசையைப் பயன்படுத்தாமல் இருந்தது. அதனால் இன்னும் படம் வாழ்க்கைக்கு நெருக்கமாக இருக்கிறது. இந்தக் கொட்டுக்காளி நேர்மையான, எளிமையான சிறந்த படைப்பு” என்றார்.    
 

சார்ந்த செய்திகள்