இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வருகிறார். அந்த வகையில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை என்னும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியுள்ளார். மேலும் அங்கிருந்தவர்களுடன் உரையாடல் மேற்கொண்டு அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.
அப்போது பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் சாதிச் சான்றிதழ் கட்டாயம் கேட்பது தொடர்பாகக் கேள்வி கேட்கப்பட்டதையடுத்து அதற்கு பதிலளித்த வெற்றிமாறன், "நான் என் பசங்களுக்கு சாதி இல்லை (No Caste) என சான்றிதழ் வாங்க முயன்றேன். கொடுக்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க. பிறகு கோர்ட்டுக்கு போனேன். அங்கேயும் அப்படியெல்லாம் கொடுக்க முடியாது. நீங்க சாதி குறிப்பிட்டுத்தான் ஆகணும் என தீர்ப்பு வழங்கிட்டாங்க. இதையடுத்து சாதி சான்றிதழ் எங்கேயும் கொடுக்காதபடி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதிச் சான்றிதழ் கேட்பதை நிறுத்த வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். அதேசமயம் அவர்களுக்கான உரிமையை அவர்கள் பெற்றுத்தான் ஆக வேண்டும். எனக்கு சாதி சான்றிதழ் தேவையில்லை என நினைக்கிறேன். சமூகநீதிக்கு சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அதற்காக உடனே நாம் அதை தூக்கிப் போட முடியாது" என்றார்.