சென்னை வளசரவாக்கத்தில், தமிழ் ஸ்டூடியோ சார்பில் பியூர் சினிமா புத்தக அங்காடி திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், புத்தக அங்காடியைத் தொடங்கி வைத்தார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் புத்தக வாசிப்பு குறித்துப் பேசுகையில், "புத்தக வாசிப்பு ரொம்ப அவசியமானது. எந்த காலகட்டத்திலும் நாம் நம்மை மேம்படுத்துவதற்கும் பக்குவமடைவதற்கும் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து போவதற்கும் வாசிப்பு ரொம்ப அவசியமானது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் எல்லாருமே நிறைய வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சினிமாவில் இருப்பதால் இன்னும் நிறைய படிக்க வேண்டியிருக்கு. இன்றைய சினிமா ஒரு சமூகத்தை இயக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் அப்படி ஒரு சூழல்.
கட்டாயம் எல்லாரும் படிக்க வேண்டும். படிப்பதன் வாயிலாகத் தான் நாம் நம்முடைய பழக்கங்களிலிருந்து அல்லது பழக்கி வைக்கப்பட்டிருந்த விஷயத்திலிருந்து விடுவிச்சிக்க முடியும். சமத்துவம் என்பது பிறப்புரிமை. அதில் எந்த கேள்வியும் இல்லை. எல்லாருக்கும் எல்லாமே சமமாக கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை. அதை மாற்றுகின்ற எதுவாக இருந்தாலும் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை எதிர்ப்பதும் வீழ்த்துவதும் விடுதலையை விரும்பும் மனிதர்களாக நம்முடைய கடமை.
அது பற்றிப் பேசியிருக்கின்ற உதயநிதியுடன், சுதந்திர உணர்வுள்ள அனைவரும் நிற்க வேண்டும். அவருடன் நானும் நிற்கிறேன். அவர் கூறியதை ஆதரிக்கிறேன். இதை நான் சொல்வதற்கான காரணம், நமக்கு இதுவரை தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்ற விஷயத்திலிருந்து விடுதலை பெறவேண்டும். அது அறிவுப்பூர்வமான வாசிப்பிலிருந்து கிடைக்கும் என்பது எனது நம்பிக்கை" என்றார்.