தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருந்து வரும் சித்தார்த் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், அவ்வப்போது சமூகப் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி 'சிஆர்பிஎப்’ (CRPF) அதிகாரிகள் வற்புறுத்தியதாகத் தனது சமூக வலைத்தளத்தில் சித்தார்த் குற்றம் சாட்டியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த பதிவில், "மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். அவர்கள் வயதான என் பெற்றோரிடம் பையிலிருக்கும் நாணயங்களை வெளியே எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் இந்தியில் தொடர்ந்து எங்களிடம் பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன். ஆனாலும் இந்தியில் பேசியபடியே இருந்ததற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் எனத் திமிராகப் பதிலளித்தார்கள்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சித்தார்த்துக்கு ஆதரவாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "மதுரை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பணியாளர்கள் நடிகர் சித்தார்த்திடம் இந்தியில் பேசச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அவரிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகவும் சித்தார்த் கூறியது குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.