ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், ஸ்ரீனிவாசா சித்தூரி புரொடக்ஷன்ஸ், பவன்குமார் வழங்கும் ’வெங்கட்பிரபுவின் ஹண்ட்’ என்ற டேக் லைனோடு 'கஸ்டடி' டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் படத்தின் ஹீரோ நாக சைதன்யா, ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி, தயாரிப்பாளர் சீனிவாசா, இயக்குநர் வெங்கட்பிரபு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் வெங்கட்பிரபு பேசியதாவது: "என்னுடைய முதல் தெலுங்கு படம் ‘கஸ்டடி’. நாக சைதன்யாவின் முதல் தமிழ் படம். படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. அதிக செலவில் எடுக்கப்பட்ட என்னுடைய முதல் படம் இது. அந்த அளவு இந்த கதை மேல் நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. நாக சைதன்யாவிடம் முதலில் கதை சொன்னதும் அவருக்கு பிடித்துப் போனது. என்னுடைய முதல் தேர்வும் அவராகத்தான் இருந்தார். பிறகுதான் தயாரிப்பாளரிடம் கதை சொன்னேன். படம் முழுவதும் ஆக்ஷன் மோடிலேயே இருக்கும். வெங்கட்பிரபு படம் என்றாலே ஜாலியாகதான் இருக்கும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் படம் புது அனுபவமாக இருக்கும்.
தீவிரமான கதைக்களம் கொண்டதாக இருக்கும். நாக சைதன்யாவுடன் சேர்ந்து முக்கியமான கதாபாத்திரம் செய்திருப்பவர் அரவிந்த் சாமி சார். அவரிடம் கதை சொல்லி கன்வின்ஸ் செய்வது கஷ்டம். கதை பிடித்துப் போய் ஒத்துக் கொண்டார். சரத்குமார், பிரியாமணி எல்லாருக்கும் நன்றி. கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். எனக்கு தெலுங்கு புரியும். நாக சைதன்யாவுக்கு தமிழ் தெரியும். மற்றவர்களும் தமிழ் நடிகர்கள் என்பதால் வேலை செய்தது எளிது. ராஜா சாரின் பெயர் என் படத்தில் வர வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இதில் நிறைவேறியுள்ளது. யுவனும் அருமையாக இசையமைத்துள்ளார். தமிழில் பிரேம்ஜி கதாபாத்திரத்தை தெலுங்கில் வெண்ணெல்லா நடித்துள்ளார். இது ஆக்ஷன் படம் என்பதால் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.”