பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் கடந்த 14 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டுள்ள இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். சீசன் 2 விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஐஎம்டிபி ரேட்டிங்கில் 9.1 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள் ராஜேஷ் கண்ணா, சினேகன் உள்ளிட்டோர் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர்.
அந்த வகையில் இயக்குநர் குமரன், சின்னத்திரை பிரபலம் ராஜு ஜெயமோகன், நடிகர் பால சரவணன் மற்றும் நடிகை வாணி போஜன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் வசந்த பாலன் இப்படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “ஜீ5-ல் வெளியாகியுள்ள வீரப்பன் தொடர் மிகவும் காத்திரமாக, நடுநிலையோடு, துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ளது. குரலற்ற, பாதிக்கப்பட்ட, உண்மையான மனிதர்களின் பேட்டியைக் காணும்போது தொடர் என்பதை மறந்து கண் கலங்குகிறது. ஹண்ட் ஃபார் வீரப்பன் (Hunt for veerappan) தொடர் ஒரு சார்பானதாகவும் அது ஒரு அரசியல் என உணர முடிந்தது. இந்த தொடர் வெளிவந்தது நல்தருணம். இந்த தொடரில் வீரப்பன் எழுப்பும் பல கேள்விகளுக்கு பதில் இல்லை நம்மிடம்.
நடிகனுக்கு இந்த தமிழ்நாட்டுக்காரனுங்க ஏன் ஓட்டு போடுறானுங்க. அரசியலைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும் என்று வீரப்பன் கேள்வி கேட்கும்போது, அத்தனை ஆண்டுகள் கழித்தும் விடை தெரியா சிரிப்பு கேள்வி. காட்டுக்குள் இருக்கும் முறையான படிப்பறிவு இல்லாத ஒருவனின் கேள்வி முக்கியமானது. இந்த தொடரைக் காணும்போது வீரப்பன் நல்ல கதைச் சொல்லியாகவும் நல்ல மேடை நடிகனாகவும் தோற்றமளிக்கிறான். வீரப்பன் குரல் பிசிறு இல்லாமல் பேட்டியில் வெளிப்படும்போது அவனிடம் இருந்த ஆளுமை வெளிப்படுகிறது. ஏகே 47 துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவன் நடித்துக் காட்டுவதையும் நடனம் ஆடுவதையும் பார்க்கும்போது சன்னதம் கொண்டாடும் வனதேவனைப் பார்ப்பது போல உணர்ந்தேன்.
வீரப்பன் யானைகளைக் கொன்று தந்தங்களை திருடியவன். சந்தன மரங்களைக் கடத்தியவன். அவன் குற்றவாளி என்றால் வாங்கியவன் யார்? வீரப்பன் தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் தன்னைக் காட்டிக் கொடுத்த கிராமத்தினரையும் கொன்றது மகா குற்றம் என்றால் தேடுதல் வேட்டையில் காவல்துறை மலைவாழ் மக்களைக் கொடூரமாகச் சித்திரவதைச் செய்ததையும், பெண்களை வன்புணர்வு செய்து தடாவில் சிறையில் அடைத்த கொடூரத்திற்கு என்ன பெயர் சூட்டுவது? முன்பே நக்கீரன் பத்திரிகையிலும் இணையத்தில் வந்திருந்தாலும் இணையத் தொடராக பார்க்கும்போது இலங்கையில் மட்டுமல்ல நம் தமிழகத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எந்த அரசும் செவி கொடுக்கவில்லை என்பது அநீதி. சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளியான பிறகும் நிவாரணத் தொகை இன்றைய தேதி வரை பாதிக்கப்பட்ட பலருக்கு சென்று சேரவில்லை என்ற தகவலை கேட்கும்போது கவலையளிக்கிறது.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரின் வீடியோ வெளியானது. இருபக்க நியாயங்களையும் எடுத்து கூறியது இந்த இணையத் தொடரின் சிறப்பு. நக்கீரன் பத்திரிகை நிருபர்களுக்கும், நக்கீரன் ஆசிரியருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்தொடரின் படக்குழுவினரான ஜெயச்சந்திர ஹாஷ்மி, பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன், ஷரத் ஜோதி உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டினார்.